×

மனு தாக்கல் செய்ய செல்வப்பெருந்தகை சென்றதால் ராகுலை வரவேற்கவில்லை: தங்கபாலு பேட்டி

சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதால் ராகுல் காந்தியை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் தங்கபாலு தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தனர். சென்னை பழைய விமான நிலையத்தில், 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, தனித்தனி விமானங்களில் புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் கண்ணூருக்கு புறப்பட்டு சென்றனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை விமான நிலையத்திற்கு வருவார்கள். அப்போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தியுடன் சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தி, அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு எப்போது வருவார்கள் என்பது பற்றி பேசி முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்க, சென்னை விமான நிலையத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவில்லை. அதோடு காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் யாரும் வரவில்லை. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் சொர்ணா சேதுராமன், கக்கன் பேத்தி இமையா கக்கன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.

அப்போது தங்கபாலு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ராகுல் காந்தி அடுத்த கட்டமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வர இருக்கிறார். அப்போது தமிழ்நாட்டில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்கள். முதல்கட்ட தேர்தல் நடக்க இருக்கும் இடங்களுக்கு ராகுல் காந்தி முதலில் சென்று பிரசாரம் செய்கிறார். நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பிரசாரத்திற்கு வருவார்.
தமிழ்நாட்டின் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ராகுல் காந்தி அதிருப்தியில் இருந்தார் என்பது தவறான தகவல். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவருக்கு, விசிக தலைவர் திருமாவளவன் சீட் கொடுத்ததற்கு நன்றி. இளையபெருமாள் ஒரு கட்சியை சார்ந்தவர் அல்ல. அவரின் மகன் ஜோதிமணிக்கு, விசிகவில் வாய்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி. திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடி தர முடியாது. அவர் உன்னதமான தலைவர், மிகுந்த பண்பாளர். அவராக முன்வந்து எடுத்த முடிவு இது. இவ்வாறு தங்கபாலு கூறினார். ராகுல் காந்தியை வரவேற்க செல்வப்பெருந்தகை, சென்னை விமான நிலையத்திற்கு வராதது ஏன் என்ற கேள்விக்கு, செல்வப்பெருந்தகை, இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றுவிட்டார். இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால், அவர் இன்று கண்டிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் ராகுல் காந்தியை வரவேற்க, வராததற்கு வேறு எந்த காரணமும் கிடையாது என்று கூறினார்.

Tags : Selvaperundhagai ,Rahul Gandhi ,Thangapalu ,Chennai ,Tamil Nadu Congress ,president ,Chennai airport ,Congress ,All India Congress ,General Secretary… ,
× RELATED என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியை...