*விடிய, விடிய தேடி போலீசார் மீட்டனர்
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே நாயுடன் வழிதவறி சென்று, மலை குகையில் தூங்கிய 4 வயது சிறுவனை விடிய, விடிய தேடி போலீசார் மீட்டனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குட்டிமேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(35), விவசாயி. இவரது மனைவி பூங்கொடி(30). இவர்களுக்கு 4 வயதில் விஷ்மித் என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் மாலை, விஷ்மித் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்து வழிதவறி சென்றுவிட்டான்.
தாய் பூங்கொடி மற்றும் அருகிலிருந்தவர்கள் தேடியும் அவன் கிடைக்கவில்லை. எப்போதும் அவன் நாயுடன் தான் விளையாடுவது வழக்கம் என்பதால், குட்டிமேக்கம்பட்டி பகுதியில் அருகில் உள்ள தெருக்களில் தேடினர். அப்போது மோரூர்கரடு உள்ள பகுதியில், அந்த வழியாக நாயுடன் ஒரு சிறுவன் சென்றதாக சிலர் சொன்னதை கேட்டு, அவனைத் தேடி ஊர் மக்களும் சென்றனர்.
அப்போது, சண்முகபுரம் அருகே உள்ள மோரூர்கரடு பகுதியில் நாய் இருந்தது. ஆனால், சிறுவனை காணவில்லை.
அவன் மலைப்பகுதிக்கு தான் சென்றிருக்க வேண்டும் என நாய் அந்த இடத்தில் இருந்ததை வைத்து சந்தேகப்பட்ட ஊர் மக்கள், இரவு முழுவதும் விஸ்மித்தை தேடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி வரை, விஸ்மித்தை அந்த மலை கரடு பகுதியில் எங்கு இருக்கிறான் என ஹெலிகேமராக்கள் விட்டு தேடினர். ஆனால், இரவு மழை பெய்ததால் மீட்பு பணிகளை நிறுத்திய அதிகாரிகள், மீண்டும் நேற்று காலை 5.30 மணி முதல் விஷ்மித்தை தேட தொடங்கினர்.
அப்போது, மலை கரட்டுக்கு நடுவே ஒரு குகைக்குள், சிறுவன் விஷ்மித் தூங்கி கொண்டிருந்ததை கண்ட அதிகாரிகள், உடனடியாக அவனை மீட்டு கீழே கொண்டு வந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் தேர்தல் நேரம் என்றும் பாராமல், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் மிகுந்த சிரத்தை எடுத்து சிறுவனை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
