*வாசகர்களின் நீண்டநாள் கனவு நனவாகியது
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ-8.53 கோடியில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இதன் மூலம் வாசகர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியது. இதற்கு வாசகர்கள், பொதுமக்கள் அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இடும்பாவனம் ஊராட்சி என்பது ஒரு பெரிய ஊராட்சியாகும். இங்கு நெல் விவசாயிகள், தென்னை விவசாயிகள், மீனவர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு பகுதியாகும்.
இங்கு பல ஆண்டுகளாக அரசு நூலகம் ஒன்று அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சிறப்புடன் இயங்கி வந்தது. இந்த நூலகத்திற்கு இடும்பாவனம் மட்டுமின்றி சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து சென்றனர். அதற்கேற்ப ஆயிரக்கணக்கான பழமையான பல அறிய புத்தகங்கள் மிகவும் பயனுள்ள புத்தகங்கள் என வரிசை கட்டி இப்பகுதி மக்களை வெகுவாக கவர கூடிய நூலகமாக இருந்தது.
இந்நிலையில் நூலகம் இயங்கி வந்த கட்டிடம் பழுதடைந்த மழைநீர் கசிந்து வந்ததால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும் வாசகர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஒரு பழமையான நூலக கட்டிடத்தை புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும், முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகம் அருகே இருந்த பழுதடைந்த இந்த நூலக கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதியதாக கட்ட வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் முன்பு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இவைகளை கண்டுக்கொள்ள வில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இடும்பாவனம் பகுதியில் நூலகத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்தார். அதேபோன்று தில்லைவிளாகத்தில் ரூ.51.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடமும், முத்துப்பேட்டை நகரத்தில் ரூ.64.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடமும் என ரூ.8.53 கோடியில் மூன்று புதிய கட்டிடங்கள் கட்ட உத்தரவிட்டார்.
அதன்படி சென்ற மாதங்களுக்கு முன்பு மூன்று இடத்திலும் பழைய நூலக கட்டிடம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் அதே மாதத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, வட்டார வேளாண்மை குழு தலைவர் இரா.மனோகரன் மேதரும். மாவட்ட நூலக அலுவலர், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தற்போது மூன்று இடங்களிலும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை அறிந்து உடனடியாக செய்த திராவிட மாடல் அரசுக்கு முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நூலக வாசகர்களும் நன்றி கூறினர்.
