*கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்பு
தென்காசி : நெல்லை, தென்காசி ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்.18ம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. 22ம் தேதி புதுவாழ்வு தியான மையம் நடைபயணம் நடந்தது.
28ம் தேதி அதிதூதர் மிக்கேலின் மாதாந்திர சிறப்பு நவநாள் நடந்தது. மார்ச் 1ம் தேதி இரண்டாம் ஞாயிறு தவக்காலம் நடந்தது. 8ம் தேதி மூன்றாம் ஞாயிறு செங்கோல் நகர் கிளை பங்கிற்கு தவக்கால பயணம் நடந்தது. 15ம் தேதி பங்கு ஆலயத்தில் ஒரு நாள் தியானம் அருள் தந்தை அருள்ராஜ் தலைமையில் நடந்தது. 23ம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
ஏப்ரல் 2ம் தேதி பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பாதம் கழுவுதல் நடந்தது. 3ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சடங்குகள் நடந்தது. இந்த நாள் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நாளில் இருந்து மூன்றாவது நாளில் இந்த பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது. திருப்பலியின் தொடக்கமாக ஆலயத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு பங்குதந்தைகளால் பாஸ்கா மெழுகுவர்த்தி மந்திரிக்கப்பட்டு அதன் பின்பு திரியேற்றப்பட்டது.
இறைவார்த்தை வழிபாடு, புதுப்பிக்கும் வழிபாடு, நற்கருணை வழிபாடு நடந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலியினை தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் பங்கு தந்தையும் திருத்தல அதிபருமான ஜேம்ஸ் தலைமையேற்று நிறைவேற்றினார், அவருடன் இணைந்து திருத்தல உதவிப் பங்குத் தந்தை அருட்பணி ஜியோ சந்தனம், சேவியர், ஜாய் திருப்பலியினை நிறைவேற்றினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உலக நன்மைக்காக மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுதல் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கு பேரவையினர், செங்கோல் நகர், இலத்தூர், குத்துக்கல்வலசை, குடியிருப்பு, மத்தளம் பாறை ஆகிய கிளை பங்குகளில் இருந்து திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் தென் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இயேசு உயிர்தெழுதல் நிகழ்ச்சி நடந்தது. திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
