பி.திப்பனப்பள்ளி, ஏ.கொத்தப்பள்ளியில் எருது விடும் விழா கோலாகலம்

கிருஷ்ணகிரி, பிப்.19:  பி.திப்பனப்பள்ளி, ஏ.கொத்தப்பள்ளியில் நடந்த எருது விடும் விழாவில், மாடுகள் முட்டியதில் 30 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இதனால், ராணுவ கிராமம் என்றழைக்கப்படும் பி.திப்பனப்பள்ளியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 20வது ஆண்டாக எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.  இதில், பி.திப்பனப்பள்ளி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்து ஓட விட்டனர். போட்டியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். காலை துவங்கிய போட்டியில், ஒவ்வொரு காளையாக மைதானத்தில் அவிழ்த்து விட்டனர்.

அப்போது, குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடக்கும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறைந்த நேரத்தில் முதலில் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இதில், முதல் பரிசாக ₹55 ஆயிரம், 2ம் பரிசாக ₹45 ஆயிரம், 3ம் பரிசாக ₹30 ஆயிரம், 4ம் பரிசாக ₹25 ஆயிரம், 5ம் பரிசாக ₹20 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் ₹5 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. எருதாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த காளைகள் முட்டியதில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே பிதிரெட்டி ஊராட்சி ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில், எருது விடும் விழா நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 300க்கும் மேற்பட்ட காளைகளை அலங்கரித்து ஓட விட்டனர். போட்டியில் திரளான மாடு பிடி வீரர்கள் பங்கேற்று, காளைகள் கொம்புகளில் பரிசு பொருட்களுடன் கட்டப்பட்டிருந்த தட்டிகளை பறித்தனர். மாடுகள் முட்டி தூக்கி வீசியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எருதாட்டத்த பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கெலமங்கலம் எஸ்ஐ பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: