×

நினைச்சதை சாதித்த எடப்பாடி அன் கோ…! அண்ணாமலைக்கு நோ ‘சீட்’

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது. இம்முறை அதிமுக-பா.ஜ கூட்டணியில், கோவை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு என ஏதாவது ஒரு தொகுதியில் கண்டிப்பாக களம் இறங்க பா.ஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இக்கூட்டணியில் பாஜவுக்கு, கோவையில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட காரணத்தால், இத்தொகுதியில்தான் போட்டியிட்டாக வேண்டும் என இக்கட்டான நிலை அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

ஆனால், இத்தொகுதியை முன்பே குறி வைத்து கோவை தெற்கில் இருந்து கோவை வடக்கிற்கு தாவி, எல்லா முன்னேற்பாடுகளையும் பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்திருந்தார். இதனால், அண்ணாமலைக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே பெரும் முட்டல்-மோதல் ஏற்பட்டது. இருவரது ஆதரவாளர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும், தொகுதிக்குள் வேலை செய்ய மாட்டோம், என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக வேட்பாளர்களுக்கும் வேலை செய்ய மாட்டோம்… என ‘செக்’ வைத்தனர்.

இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அண்ணாமலையை சென்னைக்கு அழைத்து தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், ‘‘திருப்பூர் தெற்கு அல்லது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுங்கள்… கோவை வடக்கு தொகுதியை வானதி சீனிவாசனுக்கு விட்டுக்கொடுங்கள்…’’ என கேட்டுக்கொண்டார். ஆனால், இதை அண்ணாமலை ஏற்கவில்லை.

இந்த தகவலை அகில இந்திய தலைமைக்கு பியூஸ் கோயல் கொண்டு சென்றார். அகில இந்திய தலைமையும் முடிவு எடுக்க முடியாமல் ஒத்தி வைத்தது. இதன்காரணமாகவே, பா.ஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று பா.ஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அண்ணாமலை பெயர் இல்லை.

அதிமுக-பா.ஜ. இடையே சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாக, அதாவது பா.ஜ மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதும், மாநில தலைவர் பதவியில் இருந்து கிழே இறங்கிய பிறகும், அதிமுகவையும், அதன் தலைவர்களையும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி, இவரது தீவிர அனுதாபி எஸ்.பி.வேலுமணி என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த விமர்சனம், அதிமுக தலைவர்களை கடுமையாக காயப்படுத்தியது. அதற்கு பழி வாங்கவே அண்ணாமலைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்க விடாமல் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சூட்சுமம் செய்து தடுத்து விட்டனர். மேலும், ஒருவேளை, அண்ணாமலை வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்து விட்டால், அதிமுக தலைவர்களைவிட அவர் பிரபலமாகி விடுவார் என்ற மனப்பான்மையும் அதிமுக தலைவர்களிடம் உள்ளது.

இதுவும், அண்ணாமலைக்கு சீட் கொடுக்க விடாமல் சூழ்ச்சி செய்ததற்கு முக்கிய காரணம் என கோவை பா.ஜ தொண்டர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இத்தனை கசப்புணர்வு ஏற்பட்டு விட்டதால் இனி பா.ஜ. தொண்டர்கள் எப்படி அதிமுகவினருடன் முழுமையாக இணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Tags : Edappadi Un Go ,Annamalai ,Tamil Nadu ,AIADMK ,BJP ,president ,Coimbatore Singanallur ,Kaundampalayam ,Coimbatore South.… ,
× RELATED சொல்லிட்டாங்க…