பாமகவில் தந்தை மகன் மோதல் தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது. இதனிடையே ராமதாஸ் கையை மீறி மகன் அன்புமணி வசம் கட்சி முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை மீட்பதற்காக போராடி வருகிறார். இதற்காக சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் மற்றும் தனது மருமகள் சவுமியா போட்டியிடும் தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்து வருகிறார். மேலும், அன்புமணி கூட்டணி வைத்துள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும் தனது வேட்பாளர்களை ராமதாஸ் களமிறக்கி வருகிறார்.
மற்றொரு பக்கம் ராமதாஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ள சசிகலாவும், இவர்களுக்கு எதிராக வேட்பாளர்களை களம் இறக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக போட்டியிடும் செஞ்சி தொகுதியில் அன்புமணி வேட்பாளர் கணேஷ்குமாருக்கு எதிராக ராமதாஸ் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடும் மயிலம் தொகுதியில் மட்டும் ராமதாசும், சசிகலாவும் சேர்ந்து போட்டி வேட்பாளரை களம் இறக்காமல் அவர் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏவான சிவகுமார், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு ராமதாஸ் தரப்பு தனது வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. மயிலம் தொகுதியை சிவகுமார் எம்எல்ஏ, அதிமுக சி.வி.சண்முகத்திற்காக விட்டுக் கொடுத்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் சி.வி.சண்முகம் தன்னை வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கையில் அங்கு களமிறங்கி போட்டியிடுகிறார்.
ஆனால் அங்கு ராமதாஸ் தரப்பு டிவிஸ்ட் வைத்துள்ளது. இதற்காக சி.வி.சண்முகத்தின் சகலையான தனது ஆதரவாளர் புகழேந்தியை விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்திருக்கிறார் ராமதாஸ். இதனால் விக்கிரவாண்டி தொகுதி வெற்றி வாய்ப்பு அன்புமணி எம்எல்ஏவுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. சி.வி.சண்முகம் தனது கூட்டணிக்கு உடன்பட்டு பாமக எம்எல்ஏ சிவகுமாருக்கு பாடுபடுவாரா அல்லது தனது சகலைக்கு ஒத்துழைப்பாரா, யாருக்கும் பாதகம் இல்லாமல் செல்வாரா என்பது போகபோகத்தான் தெரியும்.
ஆக மொத்தத்தில் ராமதாஸ் விக்கிரவாண்டி தொகுதியில் தனது மகன் அன்புமணி பாமகவிற்கும், சிவி. சண்முகத்திற்கும் டிவிஸ்ட் வைத்துள்ளார் என்றே சொல்லலாம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே தனது சகலையை அன்புமணி பாமகவிற்கு அழைத்து அங்கு சீட்டு வாங்க சி.வி.சண்முகம் வலியுறுத்தி வந்ததாக பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது ராமதாஸ் அணியில் அவர் சீட்டு வாங்கி போட்டியிடுவதால் விக்கிரவாண்டி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
