×

வேட்புமனுவை தாக்கல் செய்யவே தெரியலே…. தவெக தலைவனும் அப்படிதான்… வேட்பாளர்களும் அப்படிதான்…

தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் தவெக போட்டியிடுகிறது. முதன் முறையாக தேர்தலை சந்திப்பதால் இதற்கான வழிமுறைகள் எதுவும் தெரியாமல் காமெடி செய்து வருகின்றனர். பிரசாரத்துக்கு அனுமதி தொடங்கி வேட்புமனு வரை தலைவர் விஜய், வேட்பாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை ரக ரகமாக காமெடி செய்து வருகின்றனர். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குற்ற வழக்குகளை மறைத்துவிட்டார். அதை திருச்சி கிழக்கில் தாக்கல் செய்தார். 2 தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு வயது வித்தியாசம் இருந்தது. இதனால், நேற்று மீண்டும் திருத்தப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், புதிதாக தன்னிடம் பிரசார வேன் இருக்கிறது. வருமானவரித்துறை வழக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இப்படி பல குளறுபடி செய்து கட்சியின் தலைவரே தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் மட்டும் கரெக்டா செய்வார்களா? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே…. தவெக வேட்பாளர்கள் பண்ண காமெடியை நீங்க பாருங்க…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் விஜய் நண்பர் நடிகர் நாத் போட்டியிடுகிறார். இவர், நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவில் தேர்தல் பிரசாரத்திற்காக துவங்கப்பட்ட வங்கி பாஸ்புக் இணைப்பு இல்லாததால் அது குறித்து கேட்கப்பட்டது. பின்னர், யாருக்கோ தகவல் தெரிவித்து அதனை கொண்டு வந்து கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து விண்ணப்பத்தில் இணைப்பதற்கான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இல்லாமல் இருந்ததால் அது குறித்து கேட்ட போது அதுவும் அலுவலகத்தில் இருப்பதாக கூறி வேறு நபர்கள் மூலம் வாங்கிக் கொடுத்தார். வாக்காளர் அடையாள அட்டையை கேட்டபோது அது சென்னையில் இருப்பதாக கூறினார். பின்னர் கம்ப்யூட்டர் சென்டருக்கு ஆள் அனுப்பி நகல் எடுத்து கொடுத்தார். அவரது இந்த செயலை கண்டு அவரது கட்சியினரே அதிர்ச்சியடைந்தனர்.

வைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளராக அன்னை விஜி சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல் முருகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மனுவை முழுமையாக நிரப்பாதது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக வேட்பு மனுவை அவரிடம் அலுவலர் திருப்பி வழங்கினார். மாலை 3 மணி ஆக இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே உள்ளது எனவும், அதற்குள் முடிந்தால் நிரப்பித் தாருங்கள் அல்லது திங்கட்கிழமை வாருங்கள் என்று அனுப்பினார். இதனால் தவெக வேட்பாளர் அன்னை விஜி சரவணன், 6ம்தேதியே வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் (எ) குட்டி. இவர் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இவர் மீது கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாலியல் சீண்டல் புகார் அளித்திருக்கிறார். திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்ற நிலையில், பூந்தமல்லியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது அவரது வேட்புமனுவை உடன் வந்த கட்சி நிர்வாகி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை வேட்பாளர்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து அந்த வேட்புமனுவின் முதல் பகுதியில் உரிய ஆவணங்களை சரியாக வைக்காமல் கொடுத்த நிலையில் அதனை வாங்கிய தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை உரிய ஆவணங்களுடன் சரி செய்த பிறகு பெற்றுக் கொண்டார். தவெக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதில் திணறிய நிலையில் அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சுட்டிக் காட்டி சரி செய்தார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் வீரமணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட 4 பேருடன் ஊர்வலமாக நேற்று மதியம் 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது தேர்தல் அலுவலரான சத்யாவிடம் வேட்பு மனு தாக்கல் படிவத்தை கொடுத்த போது, அதில் உறுதிமொழி படிவம் இல்லாததை கண்டறிந்த தேர்தல் அலுவலர், வேட்பாளரிடம் இதுகுறித்து கேட்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகையையும் எடுத்து வருவதற்கு வேட்பாளர் வீரமணி மறந்து விட்டார்.

பின்னர் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி படிவம், டெபாசிட் தொகை எடுத்து வந்தனர். அரை மணி நேர கால தாமதத்திற்கு பிறகு 3 மணியளவில் வேட்பாளர் வீரமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அவிநாசி தொகுதியில் போட்டியிடும் கமலி என்பவர் சில நாட்களுக்கு முன் வேட்பு மனுவை எடுக்காமல் தாக்கல் செய்ய சென்று, நான்தான் தவெக வேட்பாளர் என கூறி அட்ராசிட்டி செய்தார். இப்படி, வேட்புமனுவையே சரியாக தாக்கல் செய்வதில் திணறும் தவெக கட்சியினர் எப்படி மக்களுக்கு பணி செய்வார்கள் என்று மக்கள் கலாய்க்கின்றனர்.

* பெண் போலீசை தள்ளி அராஜகம்
தவெக சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். அப்போது வெடி வெடித்தும், விசில் மற்றும் மேள தாளத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சென்றனர். கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகே 100 அடி இடைவெளியிட்டு பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஊர்வலமாக வந்த தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்லுமாறு கூறினர். ஆனால் தவெகவினர் நாங்கள் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் காவலர் ஒருவரை பிடித்து தள்ளியதில் கீழே விழுந்து அவரது கையில் காயம் ஏற்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாக வந்த தவெகவினரை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராஜ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்ததும் தவெகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

* சென்னையில் 13 தொகுதிகளில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் அந்த தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, சென்னையில் 16 தொகுதிகளில் 13 தொகுதி திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் எனக் கூறினார். இதேபோல் நேற்று முன்தினம் விசில் சின்னத்திற்கு வாக்குக் கேட்டவாறு சென்றவர், திடீரென விடுதலைச் சிறுத்தைகளுக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார். சமூக வலைதளங்களில் இந்த காணொலிகளை பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்து வருகிறார்கள்.

Tags : Thavega ,Tamil Nadu ,Vijay ,
× RELATED காட்டுமன்னார்கோவிலில் நான்...