பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமைக்கு ஏற்கனவே எழுத்து மூலமாக கொடுத்து விட்டேன். அதோடு கட்சியின் முக்கிய உயர்மட்ட தலைவர்கள் அனைவரிடமும் நான் போட்டியிடவில்லை என்பதை வலியுறுத்தி கூறிக் கொண்டுதான் இருந்தேன். அதனால்தான் டெல்லிக்கு சென்ற பட்டியலில் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இப்போது கட்சி தலைமை என்னை பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 27 பாஜ வேட்பாளர்கள், மற்றும் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் எல்லோருக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு என்று எல்லா மாநிலங்களிலும் பிரசாரம் செய்து, என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவேன். நான் ஒரு தொகுதியில் முடங்கிக் கொண்டு அங்கு மட்டும் வேலை செய்து கொண்டு இருக்க விரும்பவில்லை. அதனால்தான் நான் ஒரு குறிப்பிட்ட தொகுதியை கேட்டு போட்டியிட விரும்பவில்லை. எனவே, நான் வேட்பாளர் ரேசில் இருக்கவில்லை. என்னுடைய வேலை வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி வரை அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறேன். 21ம் தேதி மாலை வரையில் பிரசாரம் ஒன்று தான் எனது குறிக்கோள். அதன் பின்பு மற்றதெல்லாம் நான் பேசுவேன்.
இன்னும் காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது, நிறைய தேர்தல்கள் வரத்தான் போகிறது. அன்றைக்கு நாம் போட்டி போட்டுக் கொள்ளலாம். என்னோடு அன்போடு இருக்கக் கூடிய மக்கள், எப்போதும் என் மீது அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்தத் தேர்தல் என்னோடு சண்டை என்பது, தமிழ்நாடு முழுவதும் நான் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். இதை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நான் தேர்தலில் போட்டி போடாததற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துவதற்காக கூறுகிறேன். நிறைய பேர் நான் போட்டி போடாததற்கு அது இது என்று பேசுகின்றனர்.
ஆனால் தமிழ்நாடு தேர்வு குழுவில் இருந்தே, என்னுடைய பெயர் மேல் மட்டத்துக்கு போகாத நிலையில், பாஜ தலைமை எப்படி சீட் கொடுக்க முடியும்?. அதேபோல் நான் போட்டியிட விரும்பவில்லை என்பதால், கட்சித் தலைமை, என்னை பிரசாரம் செய்ய சொல்லி கூறியுள்ளது, கட்சி தலைமையை நான் எவ்வாறு குறை கூற முடியும். சென்னை விமான நிலையத்தில் பியூஸ் கோயல் என்னைப் பற்றி கூறியது குறித்தும் கேள்விப்பட்டேன். என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தலைமை எனக்கு மரியாதை கொடுத்ததற்கு, கட்சிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
* மேக் இன் இந்தியா கையேந்தி நிக்குது… ஒன்றிய அரசு மீது கனிமொழி சாடல்
திருச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி பொதுவாக யாருமே பேசுவது கிடையாது. ஆட்சிக்கு வராதவர்களின் தேர்தல் அறிக்கையை குறித்து மக்கள் பேசவே மாட்டார்கள். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், எல்பிஜி தட்டுப்பாடு சரி செய்யட்டும், அதன்பிறகு தமிழ்நாட்டை பற்றி பேசட்டும். இதுமிக முக்கியமான பிரச்னை, தேர்தல் நேரத்தில் கற்பனை விஷயங்கள் குறித்து பேசி பயனில்லை. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பிரச்னைதான் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, “மேக் இன் இந்தியா… மேக் இன் இந்தியா’’ என்று கூறிக்கொண்டு, இந்த நிலைக்கு தள்ளி விட்டனர். இறக்குமதியை மட்டும் நம்பியே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முதலமைச்சர் இதுகுறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு உதவக்கூடிய எந்த ஒரு நிறுவனமும், தொண்டு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் உரிமையை பறிக்க கூடிய சட்ட முன்வடிவு தான் இது. இந்த சட்ட முன் வடிவு மிகப்பெரிய டிரக்கோனியன் லா இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடி, அன்புமணி, டிடிவி துரோக கூட்டணி: திவாகரன் கடும் தாக்கு
அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலாவின், சகோதரர் திவாகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தன்னை அமர வைத்து அழகு பார்த்த சசிகலாவிற்கு துரோகத்தை பரிசளித்தவர் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு துரோகத்தை பரிசளித்தவர் அன்புமணி. அரசியலில் ஓரம் கட்டப்பட்டு கிடந்தவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகத்தை பரிசளித்தவர் டிடிவி. தினகரன். இவர்கள் இன்றைக்கு பொருந்தாத கூட்டணியில் இணைந்து தங்களை உத்தமர்களாக காட்டி கொண்டு வலம் வருகின்றனர். துரோகிகள் ஒன்று கூடி அமைத்துள்ள இந்த துரோக கூட்டணியை தமிழக மக்கள் தேர்தலில் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பார்கள். தமிழக மக்களுக்கு எந்தவிதமான துரோகங்களும், தீங்கும் செய்யாத ராமதாஸ், சசிகலா ஆகியோர் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணி தமிழக மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.
