செங்கல்பட்டு: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவு பணம், நகை அல்லது பரிசு பொருட்கள் கொண்டு வருவதை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் புறவழிச் சாலையில் நேற்று மாலை பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 35 பவுன் நகைகள், 10 கிராம் தங்க காசுகள், 50 கிராம் எடையில் 2 வெள்ளி பிஸ்கட் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் வந்த தம்பதிகளிடம் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த பிரகாஷ், அவரது மனைவி ஜோஷி என்பதும், மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் நகைகள் மற்றும் ரொக்க பணத்துக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு திரும்ப பெற்று கொள்ளலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவற்றை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
