சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்பது குறித்து பாஜக தலைமை இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இன்னும் நாளையும், 6ம் தேதி மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்த சூழலில் அந்த வேட்பாளர் பட்டியலில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இருக்கிறதா, அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் பாஜ தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார். கோவை வடக்கு தொகுதியில் நான் தான் வேட்பாளர் என்று வானதி சீனிவாசன் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
இதனால், இந்த தொகுதி அண்ணாமலைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அண்ணாமலையும் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அண்ணாமலை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ‘தீவிர பிரசாரம் செய்வேன்’ என கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையை சமாதானம் செய்ய பாஜக தலைமை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வர உள்ளார். இன்று (ஏப்.3) சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு; சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்பது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
