×

பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: மொடக்குறிச்சியில் போட்டியா?

சென்னை: தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன், பியூஷ் கோயல் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர் முரண்டு பிடித்து வருவதால் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில், பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை என்றும், பாஜ வெல்வதற்கு கடினமாக இருக்கும் தொகுதிகளை குறி வைத்து எடப்பாடி பழனிச்சாமி பாஜவிற்கு தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடும் வகையில் பல்லடம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் சூலூர் தொகுதிகளை குறிவைத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை பாஜவுக்கு ஒதுக்கவில்லை. இதேபோல் பாஜ பலமாக இருப்பதாக நினைக்கும் சென்னை, கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் அண்ணாமலையை கட்சி தலைமை கண்டிப்பாக தேர்தலில் போட்டிட வலியுறுத்தியுள்ளது. இதனால் தனக்கான தொகுதி கிடைத்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறி வருகிறார். இதனால் அண்ணாமலையை களமிறக்கும் வகையில் ஒரு சில தொகுதிகளை மாற்றி தரும்படி பாஜ சார்பில் அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.  ஆனால் அதிமுக தலைமையோ மறுத்துவிட்டது. இதனால் கடுப்பான அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளளனர்.

இதற்கிடையே, பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களம் இறங்கும் படி பாஜ தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக வானதி சீனிவாசன் துண்டு போட்டு இடம் பிடித்து வைத்துள்ளார். கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலைக்கு விட்டு கொடுக்க முடியாது என்று கூறிவருகிறார். இது அண்ணாமலைக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால்,தேர்தல் பணிகளையும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், கோவை வந்த பிரமரை வரவேற்க அண்ணாமலை வரவில்லை. இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையை, மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கும் படி அண்ணாமலையை வற்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரணத்தால் தான் பாஜவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் குழப்பம் நீடித்து வருகிறது.

வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் 4 நாள் இருக்கும் நிலையில் அண்ணாலை என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு பாஜவில் நீடித்து வருகிறது. மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று பாஜ மேலிடம் கூறி வருகிறது. அவர் இதுவரை சம்மதிக்காவிட்டாலும் அவரை சமாதானப்படுத்தி, தேர்தலில் நிற்க வைக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கோவை வடக்கு தொகுதி தாான் வேண்டும் என்றும், மொடக்குறிச்சி உள்ளிட்ட வேறு எந்த தொகுதியிலும் தன்னால் போட்டியிட முடியாது என அண்ணாமலை உறுதியாக கூறிவிட்டாராம். கோவை வடக்கில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே வானதி சீனிவாசன் தயாராக இருக்கும் நிலையில், கோவை வடக்குத் தொகுதி அண்ணாமலைக்கு ஒதுக்கப்படுமா அல்லது வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை பாஜவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Piyush Goyal ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...