×

ஐபிஎல் 6வது டி20யில் இன்று சளைக்காத சன்ரைசர்ஸ்: களையிழந்த கொல்கத்தா

கொல்கத்தா: ஐபிஎல்லில் இன்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் இன்று, ஐபிஎல் 19வது தொடரின் 6வது போட்டி நடைபெற உள்ளது. அதில் இஷான் கிஷண் தலைமையிலான சன்ரைசர்ஸ், அஜிங்கிய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தா அணி, ஈடன் கார்டனில் ஆடியுள்ள 95 போட்டிகளில் 54ல் வெற்றிகளை பெற்றுள்ளது. இருப்பினும், அந்த அணியின் பந்து வீச்சு மிக சுமாராக இருப்பதால், மும்பையில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், கொல்கத்தா அணி, 6 விக்கெட் வி்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் இடம்பெற்ற பல முன்னணி பந்து வீச்சாளர்கள் காயத்தால் ஆட முடியாத சூழல் உள்ளது. அதனால், மும்பைக்கு எதிராக 220 ரன்கள் குவித்தும், கொல்கத்தா பரிதாபமாக தோற்றது. கொல்கத்தா அணியின் சுழல் வீரர் வருண் சக்ரவர்த்தி, 48 ரன்கள் தந்து விக்கெட் எடுக்காமல் ஏமாற்றினார். அந்த அணியின் கேப்டன் ரஹானே, மிடில் ஓவர்களில் ரன் எடுக்க திணறுவது வெளிப்படை. கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், பின் ஆலன், அங்கிரீஷ் ரகுவன்ஷி, டிம் செபெர்ட் உள்ளிட்டோர், இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிப்பர். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷண், பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 38 பந்துகளில் 80 ரன் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அனிகேத் வர்மாவும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.

இன்றைய போட்டியில், சன்ரைசர்ஸின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்றிச் கிளாசன் அதிரடி காட்டினால் வெற்றி எளிதில் வசப்படும். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸின் டேவிட் பேய்ன், ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷ் தூபே ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். இருப்பினும், பெங்களூரு அணியை கட்டுப்படுத்த தவறியதால் தோல்வியை தழுவ நேரிட்டது. இன்றைய போட்டியில் பிரைடன் கார்ஸ், ஈஷன் மலிங்கா, ஜீசன் அன்சாி, லியாம் லிவிங்ஸ்டோன் சிவம் மாவி சிறப்பாக செயல்பட்டால் வெற்றிக்கனியை எட்டிப்பறிப்பது எளிதாகும். இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியை பறிகொடுத்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும். எனவே, போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்
* சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள், இதுவரை 30 போட்டிகளில் மோதியுள்ளன.
* அவற்றில், சன்ரைசர்ஸ் 10 போட்டிகளிலும், கொல்கத்தா 20 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளன.
* சன்ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக 278 ரன்களை விளாசி உள்ளது.
* கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் 208.
* சன்ரைசர்ஸின் குறைந்தபட்ச ஸ்கோர் 113.
* கொல்கத்தா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 101.
* கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டியில் கொல்கத்தா 80 ரன் வித்தியாசத்திலும், மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் 110 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Tags : Sunrisers ,Hyderabad ,Kolkata Knight Riders ,IPL 6th T20 ,Kolkata ,IPL 6th ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி..!