வெலிங்டன்: தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா உல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் களமிறங்கினர். டாஸ்மின் 9 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து இணை சேர்ந்த லாரா – அனெகே பாஷ் 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்த நிலையில், லாரா (74 பந்து, 69 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் அனெகே பாஷ் (90 பந்து, 12 பவுண்டரி, 91 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின் வந்தோரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்ததால், தென் ஆப்ரிக்கா மகளிர், 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் குவித்தனர். அதன் பின் களமிறங்கிய நியூசி துவக்க வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 8, ஜார்ஜியா பிளிமர் 23 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். இருப்பினும், அடுத்து வந்த கேப்டன் அமெலியா கெர், தென் ஆப்ரிக்கா பந்துகளை தெறிக்க விட்டு ரன் வேட்டையாடினார். 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர், 23 பவுண்டரிகளுடன் 179 ரன் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரது அட்டகாச ஆட்டத்தால், நியூசி. 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் விளாசி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதனால், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனிலையில் உள்ளது.
