போச்சம்பள்ளி, ஏப். 2: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் முறையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ.158க்கும், குறைந்த பட்சமாக ரூ.86.99க்கும், சராசரி விலையாக ரூ.154க்கும் விற்பனையானது. இதில் 7915 கிலோ கொப்பரை ரூ.17.75 லட்சத்துக்கு விற்பனையானது. இதன் மூலம் 93 விவசாயிகள் பயன் அடைந்தனர். இது குறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கூறுகையில், `தேசிய மின்னணு வேளாண் சந்தை முறையில் விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. அதற்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. விவசாயிகள் கொப்பரை, பருத்தி உள்ளிட்ட பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து, கூடுதல் வருவாய் பெறலாம்,’ என்றார். நடப்பு பருவத்தில் நெல் ஏலமும் நடைபெற இருப்பதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.
