கலசப்பாக்கம், ஏப்.2: கலசப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வேட்பு மனு தாக்கல் 30ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 7ம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலினை நடைபெறும். அன்று மாலை 5 மணியளவில் ஏற்கப்பட்ட மனுக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் வெளியிடப்படும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலசப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ், கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் அலுவலர்களுடன், தேர்தல் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து ஆலோசனை வழங்கினார்.
சட்டமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும், நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு உண்டு. எனவே அதை உணர்ந்து தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அப்போது டிஆர்ஓ ராம்பிரதீபன், தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரன், உதவி தேர்தல் அலுவலர் துரைராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதையடுத்து கலெக்டர் தர்ப்பகராஜ், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
