சென்னை,ஏப். 2: நுாற்றாண்டுகள் பழமையான, சென்னை பல்கலைக் கழகம் பேராசிரியர்கள் பதவி உயர்வு, பேராசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் குறைபாடு, நிதி நெருக்கடி என பல்வேறு பிரசனைகளில் உள்ளது.
இந்த சூழலில், நிதிநிலையை மறுசீரமைக்க, பல்கலை வளாகத்தில் இயங்கும், 88 முதுநிலை பட்டப்படிப்பு துறைகளின் கல்வி கட்டணத்தில் திருத்தம் செய்ய நிதித்துறை, பல்கலைக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியது.
அந்த கடிதத்தின் அடிப்படையில் சிண்டிகேட் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில், நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறை செயலர் சங்கர் உட்பட பல்கலை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கல்வி கட்டணம் உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக, கல்வி கட்டணம் உயர்த்தப்படாததால், நிதிநிலையை சீராக்க, பல்கலை வளாக துறைகளின், கல்வி கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்த சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சுயநிதி படிப்புகளுக்கான, கல்வி கட்டணத்தை 15 சதவீதம் வரை உயர்த்திடவும், அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக உயர்கல்வித்துறையின் அரசாணையின்படி, சென்னை அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சென்னை பல்கலை அங்கீகாரத்தை விலக்கி, ‘வேல்ஸ்’ நிகர்நிலை பல்கலையுடன் இணைத்துக் கொள்ள சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
