அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிவகாசியில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார். சிவகாசி தனியார் ஜவுளி கடை அருகில் திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘சிவகாசி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தொழில்தான். இந்த தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இந்த பகுதியில் தீப்பெட்டி, அச்சகம் ஆகியவை இயங்கி வருகிறது.
அந்த தொழில்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது இந்த தொகுதி அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி என்னிடம் தொழிலதிபர்களை அழைத்து வந்து, தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சரி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்காக வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பட்டாசு தொழிலை பாதுகாத்தோம். மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் பட்டாசு தொழில் முழுமையாக பாதுகாக்கப்படும்’’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கியபோது, ‘‘சாத்தூர் தொகுதியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள…’’ என பேச்சை ஆரம்பித்தார். அப்போது அருகில் நின்ற ராஜேந்திரபாலாஜி எடப்பாடியின் காதில், ‘‘அண்ணே… இது சிவகாசி தொகுதி’’ என கூறினார். அதனை தொடர்ந்து சாரி, சாரி, சாரி என மீண்டும் ஆரம்பித்தார்.
* விஜய் பற்றி ‘கப்சிப்’
சிவகாசி பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுமார் 35 நிமிடங்கள் பேசினார். அப்போது ஒரு வரி கூட நடிகர் விஜய் பற்றியோ விஜய் கட்சி பற்றியோ எந்த இடத்திலும் அவர் விமர்சித்து பேசவில்லை.
* கூட்டணி கட்சி தலைவர் பெயரை மறந்த எடப்பாடி
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார். நேற்று மாலை பிரசார கூட்டத்தில் அவரை அறிமுகம் செய்து வைக்கும் போது ஜான்பாண்டியன் பெயரை மறந்துவிட்டு சற்றுநேரம் தடுமாறினார். உடனே அருகில் நின்ற ராஜேந்திரபாலாஜி, ‘அண்ணே அவர் பெயர் ஜான்பாண்டியன்’ என கூறினார். உடனே சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி ஜான்பாண்டியன் என தெரிவித்தார்.
* அஜித்துடன் இபிஎஸ்?
அதிமுகவை தவெக தலைவர் நடிகர் விஜய் விமர்சித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் அஜித் இருக்கும் ஏஐ போட்டோக்களை தொண்டர்கள் காண்பித்தனர். விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அதிமுகவினரே நேற்று கூட்டத்தில் ஏற்படுத்தினர்.
