தமிழக அரசியலில் புதிதாக தவெகவை நடிகர் விஜய் தொடங்கினார். அவர் புதிய அரசியலை காட்டப்போவதாக அறிவித்தார். ஆனால் அவர் ஆரம்பம் முதலே தொடர் குற்றச்சாட்டுகளால் தவெக திணறி வருகிறது. அதற்கு காரணம் அவருடன் பயணிக்கும் ரசிகர் மன்றத்தினர் பக்குவப்படாதவர்களாகவும், தவறான வழிகாட்டுதலால் தவறி செல்வதும் காரணமாக அழைந்துள்ளன. மேலும், அவர் பிரசாரம் ஆரம்பம் முதல் ஒவ்வொரு கூட்டத்திலும் வேண்டும் என்றே நெருக்கடிகளை ரசிகர்களே உருவாக்கி, பலர் உயிரிழக்க காரணமாகி வருகின்றனர்.
இந்தநிலையில், தவெக வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பலர் புதுமுகங்களாகவும், பலர் முதல்நாள் கட்சியில் சேர்ந்து அடுத்த நாள் சீட் வாங்கியவர்களாகவும் உள்ளனர். அதோடு பலர் மீது பல குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் பலர் சர்ச்சையில் சிக்கியவர்களாகவும் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சந்திர காண்டிபன் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு 10 நாட்களுக்கு முன்னர்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவர் கட்சியில் சேர்ந்தது உள்ளூர் நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. அவர் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தவெக வேட்பாளராக ஏனாதி மதன். இவர் மீதும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் மதனை மாற்ற வேண்டும் என்று ஒன்றிய செயலாளர்கள் விஜய்க்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஆண்டிபட்டி தவெக வேட்பாளராக அக்கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி அறிவிக்கப்பட்டு உள்ளார்.
சில மாதங்களுக்கு முன் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டபோது, லெப்ட் பாண்டி மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், கட்சிக்குள் தன்னை ஓரங்கட்ட லெப்ட் பாண்டி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், லெப்ட் பாண்டி, பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ‘‘நீ எப்படி இருந்தனு உன்ன பத்தி சொல்லவா… ஒழுக்கத்தை பத்தி நீ பேசலாமா? தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக உன்னை வன்மையாக கண்டிக்கிறோம். எங்க தென்மாவட்டத்துல தேனி பக்கத்துல தயவு செய்து வரணும்னு நினச்சுறாத… உன்னோட நிலைப்பாடு, உன்ன வேற மாதிரி பண்ணிப்புடுவோம்’’ என அச்சில் எழுத முடியாத அளவிற்கு பெண் ஒருவரை ஆபாசமாக லெப்ட் பாண்டி பேசியுள்ளார். தவெக பெண்களை பொன்ராஜ் அவதூறாக பேசியதையடுத்து டிஜிபி அலுவலகத்திற்கு விஜய் நேரடியாக சென்று புகார் அளித்தார்.
ஆனால், தொடர்ந்து சொந்த கட்சி பெண்களையே அச்சுறுத்தும் வகையிலும், ஆபாசமாக பேசி வரும் லெப்ட் பாண்டி போன்றோருக்கு எப்படி சீட் கொடுத்தார் என நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கியிருப்பவர் மரியவில்சன். இவர், மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது உள்பட 8 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது தந்தையுடன் சேர்ந்து ஒரு பெண்ணின் வீடு மீது தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட தலைவராகவும், பூந்தமல்லி வேட்பாளராகவும் இருப்பவர் பிரகாசம். இவர், மாவட்ட மகளிர் அணி தலைவியிடம், புஸ்ஸி ஆனந்தின் கூட்டத்திலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பம் தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா, நான் சாதி வெறியன் என்று பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெல்லை தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன், வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவர் தனது மகளுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து படங்கள், வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து இவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இவர், எடப்பாடியுடன் நெருங்கி பழகியவர். தற்போது, தென் மாவட்டங்களில் பெரும்பாலான சாலை ஒப்பந்தங்களில் இவர்தான் எடுத்து நடத்தி வருகிறார். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தவெக வேட்பாளர் கனிமொழி ஒரு லவ் ஸ்பெஷலிஸ்ட்.
இவர் பிரபல ஜோதிடர் என சொல்லி ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமாகும் என்று பிற்போக்குத்தனமாக பேசி வருகிறார். இவரது வீடியோ வைரலாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் போலியான டாக்டர் பட்டம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறு குற்றச்சாட்டுகள் நிறைந்த பட்டியலாக தவெக வேட்பாளர்கள் பட்டியல் இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
