துவரங்குறிச்சி, மார்ச் 28: துவரங்குறிச்சியில் 100% வாக்களிப்பது குறித்து பொன்னம்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி 138வது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது மருங்காபுரி தாலுகா பொன்னம்பட்டி பேரூராட்சி.
பணியாளர்கள் பொன்னம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது இந்தியா, எனது வாக்கு நமது பாரதம் வாக்களிப்பது நமது கடமை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
பிரசாரம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், வருவாய்த்துறை உதவி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
