×

வாடகைக்கு விட்டு இருந்த அதிமுகவை பாஜவுக்கு சேல் பண்ணிட்டாரு: எடப்பாடியை கலாய்த்த உதயநிதி

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை பழைய பஸ் நிலையம் பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடியுடன் கூட்டணி அமைத்து உங்களை சந்திக்க வரும் அதிமுகவை, நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். தமிழகமும் தமிழ் மக்களும் தான் முக்கியம் என கருதிய தமிழக முதல்வர், புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்ததால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல்லாயிரம் கோடி நிதியை வழங்காமல் புறக்கணித்தது.

இருந்தபோதும், தமிழக மக்களின் ஒத்துழைப்பு காரணமாக தொடர்ந்து தமிழகம் தொழில் வளர்ச்சியில், இந்தியாவில் முதல் மாநிலமாக உருவாகியுள்ளது. மோடியுடன் கூட்டணி அமைத்து, மாதந்தோறும் வழங்கப்படும், கலைஞர் மகளிர் உரிமை தொகையை நிறுத்த வேண்டும் என திட்டமிட்டனர். இதையறிந்த நமது தமிழக முதல்வர் மூன்று மாத தொகை, கோடைக்கால சிறப்பு நிதி என ரூ.5 ஆயிரத்தை அனைவரது வங்கி கணக்கிலும் வழங்கினார். சொன்னதை செய்யும் திமுக, வரும் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், மகளிர் உரிமை தொகை மற்றும் முதியோர்களுக்கான உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், ஒரு குடும்பத்திற்கான ரூ.8 ஆயிரம் மதிப்பு கிப்ட் கூப்பன் கொடுக்க உள்ளார். இதனை பெற்று உங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து பொருட்களையும், மீதம் தொகை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஜாடிக்கேத்த மூடி என்பார்கள், அதுபோல் மோடிக்கு ஏத்த எடப்பாடியாக மாறி உள்ளார் பழனிசாமி. ஏற்கனவே அதிமுகவை பாஜவிற்கு வாடகைக்கு விட்டு இருந்தார். இப்போது மொத்தமாக விற்பனை செய்துவிட்டார். மோடிக்கு கிடைத்த முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற அடிமை கூட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை. மானமுள்ள தமிழர்கள் எவரும் அவர்களை விரும்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,BJP ,Udhayanidhi ,Edappadi ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,DMK ,S. Ambedkumar ,Vandavasi ,Tiruvannamalai district ,Secular Democratic Progressive Alliance.… ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...