×

5 ஆண்டில் ரூ.734 கோடி வருமானம் ஈட்டிய விஜய்க்கு ரூ.624 கோடி சொத்து: அப்பா, அம்மா, மனைவி, மகன், மகளுக்கு பல கோடி கடன் கொடுத்ததாக பிரமாண பத்திரம்

 

 

சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தன்னைப்பற்றிய விவரக்குறிப்பில் வருமானவரித்துறையின் 2 வழக்கு இருப்பதும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ரூ.624 கோடிக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. 5 சொகுசு கார்களும், ஒரு இரு சக்கர வாகனமும் இருப்பதாகவும் அதில் கூறியுள்ளார். அதோடு தனது தந்தை, தாய், மனைவி, மகன், மகளுக்கு கடன் கொடுத்திருப்பதாகவும் அதில் கூறியுள்ளார். மேலும், அவர் அசையா சொத்துக்களாக வழிகாட்டி மதிப்பை வைத்தே கணக்கிட்டுள்ளார். ஆனால் சந்தை மதிப்பு இரு மடங்கோ, 3 மடங்கோ இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், விஜய் தனது வேட்புமனுவை பெரம்பூர் தேர்தல் அலுவலர் கீதாவிடம் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன் பெயர் ஜோசப் விஜய். வயது 52 என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய தொலைபேசி எண் 7539942026 என்றும், தனக்கு டிவிட்டர், பேஸ்புக் கணக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த மனுவில் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் விவரங்களை வழங்கியுள்ளார். அதில் தன்னிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.404 கோடி எனவும் தனது மனைவி சங்கீதாவிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.15,51,79,421 எனவும் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டு வருமானம் ரூ.734 கோடி என தெரிவித்துள்ளார். கடந்த 5 நிதியாண்டுகளில் விஜயின் வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம். வருமாறு: 2024-25ல் ரூ.184.53 கோடி, 2023-24ல் ரூ.105.69 கோடி, 2022-23ல் ரூ.198.71 கோடி, 2021-22ல் ரூ.237.46 கோடி, 2020-21ல் ரூ.8.04 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில், 2020-21ல் கொரோனா காலம் என்பதால் அவருக்கு அந்த ஆண்டில் வெறும் ரூ.8 கோடி மட்டுமே வருமானம் வந்ததாக கணக்குக் காட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 2020-21ம் ஆண்டு மட்டுமே ரூ.6,13,520 என்று மனைவி சங்கீதாவின் பெயரில் வருமான வரி காட்டப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் வருமான வரிக்கணக்கில் காட்டப்படவில்லை.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவரல்ல எனக் கூறப்பட்டுள்ளது. மகள் திவ்யா சாசாவிடம் வருமானவரிக் கணக்கு எண் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகள் – தன் மீது எந்த குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை எனவும் யாதொரு குற்றவியல் வழக்கிற்காகவும் நான் தண்டனை பெறவில்லையெனவும் விஜய் உறுதியளிக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் விவரம் வருமாறு: விஜயிடம் ரூ.2 லட்சம், மனைவி சங்கீதாவிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க இருப்பு உள்ளது.

வங்கி சேமிப்பு கணக்கில் இருப்பு மற்றும் டெபாசிட்கள் விவரங்கள்:
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சாலிகிராமம் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.213.36கோடி
* ஆக்சிஸ் வங்கி இந்திரா நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.5.79 கோடி
* எச்.டி.எப்.சி. வங்கி பெசன்ட் நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ. 77.22 லட்சம்
* ஸ்டேட் பாங்க் சாஸ்திரி நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.16,205
* ஐசிஐசிஐ வங்கி ஆழ்வார்பேட்டை கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.4.99 லட்சம் (நிலையான வைப்புத் தொகை)

* இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கோடம்பாக்கம் கிளையில் உள்ள நிலையான வைப்புத்தொகை – ரூ.25 கோடி
* ஆக்சிஸ் வங்கி இந்திரா நகர் கிளையில் உள்ள நிலையான வைப்புத்தொகை – ரூ.40 கோடி
* எச்.டி.எப்.சி. வங்கி பெசன்ட் நகர் கிளையில் உள்ள நிலையான வைப்புத்தொகை – ரூ.20 கோடி
* ஸ்டேட் பாங்க் சாஸ்திரி நகர் கிளையில் உள்ள நிலையான வைப்புத்தொகை – ரூ.15 கோடி (தேர்தல் செலவினங்களுக்காகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு)
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சாலிகிராமம் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.1 லட்சம். (நிறுவனங்களின் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகள்)

* ஜெயா நகர் பிராபர்ட்டி பி லிட் பங்குகளின் மொத்த மதிப்பு – ரூ.19.69லட்சம்
* இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பங்குகளின் மொத்த மதிப்பு – ரூ.9,600
* சன் பேப்பர் மில் லிட், பங்குகளின் மொத்த மதிப்பு – ரூ.25,000
விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு:
* கையில் உள்ள ரொக்கம் ரூ.1,00,000
* எச்.டி.எப்.சி. வங்கி பெசன்ட் நகர் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.43.41 லட்சம்
* எச்.டி.எப்.சி. வங்கி பெசன்ட் நகர் கிளையில் உள்ள நிலையான வைப்புத்தொகை ரூ,10 கோடி
* ஜெயா நகர் பிராபர்ட்டி பி லிட் ரூ.97,000

மேலும், அப்பா சந்திரசேகர், அம்மா சோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாசா என அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடன் கொடுத்ததாக கணக்கு எழுதி அவர்களையும் விஜய்க்கு கடனாளிகள் ஆக்கியுள்ளார். அதில் அவரது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் அவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.
* விஜய்யிடம் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் நகைகள்
* ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள்
* ரூ.1.20 கோடி மதிப்புள்ள 883 கிராம் தங்கம்

* விஜய்யின் மனைவி சங்கீதாவிடம் உள்ள நகைகள், தங்கம், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பொருள்கள்:
2 கிலோ வெள்ளி (ரூ.5 லட்சம்)
* ரூ.4.07 கோடி மதிப்புள்ள 3 கிலோ 132 கிராம்
* ரூ.1 கோடி மதிப்புள்ள 134.91 கேரட் வைரம்
விஜய்யிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு: ரூ.404.58 கோடி
விஜயின் மனைவி சங்கீதாவிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு: ரூ.15.51 கோடி

அசையாச் சொத்துக்கள் (விவசாய நிலம்)
* கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 50 சென்ட் (வாங்கிய ஆண்டு – 1997). வாங்கியபோது நிலத்தின் மதிப்பு ரூ.30,000 மட்டுமே. நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்று விஜய் கொடுத்த கணக்குப்படியான விபரம்

(விவசாயம் அல்லாத நிலங்கள்)
* போரூர் கிராமம் 33,955 சதுர அடி நிலம். (வாங்கிய ஆண்டு – 2010). வாங்கியபோது நிலத்தின் மதிப்பு ரூ.9.14 கோடியாகும். நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.15 கோடி.
* சாலிகிராமம் 2400 சதுர அடி நிலம் (வாங்கிய ஆண்டு – 1999). வாங்கியபோது நிலத்தின் மதிப்பு ரூ.19.85 லட்சம். நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும். 0
* சென்னை நீலாங்கரையில் 9600 சதுர அடி நிலம்(வாங்கிய ஆண்டு – 2013). வாங்கியபோது நிலத்தின் மதிப்பு ரூ.2.83 கோடி. நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.5 கோடியாகும்.

அடுக்குமாடிக் கட்டிடங்கள் உட்பட வணிகக் கட்டிடங்கள்:
* பாடியில் உள்ள 11854 சதுர அடியுள்ள கட்டிடம்(வாங்கப்பட்ட ஆண்டு – 2009). சொத்து வாங்கியபோது அதன் விலை ரூ.1.95 கோடியாகும். நிலமேம்பாடு, கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.3.90 கோடி. இதனால், இந்த சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.7 கோடியாகும்.
* தியாகராய நகரில் உள்ள 7366 சதுர அடியுள்ள கட்டிடம் (வாங்கப்பட்ட ஆண்டு – 2014). வாங்கியபோது அதன் விலை ரூ.17.43 கோடி. நிலத்தில் கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.17.30 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.35 கோடி.
* சோழிங்கநல்லூரில் உள்ள 7200 சதுர அடியுள்ள கட்டிடம்(வாங்கப்பட்ட ஆண்டு – 2012). வாங்கியபோது அதன் விலை ரூ.2.72 கோடி. நிலத்தின் கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.1.55 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.5 கோடி.
* கொப்பூரில் உள்ள 1 லட்சம் சதுர அடியுள்ள (2.30 ஏக்கர்) கட்டிடம்(வாங்கப்பட்ட ஆண்டு – 2023). வாங்கியபோது அதன் விலை ரூ.35.81 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ..35.81 கோடி.

அடுக்குமாடிக் கட்டிடங்கள் உட்பட வணிகக் கட்டிடங்களின் மொத்த மதிப்பு: ரூ.82.82 கோடியாகும்.
(அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட குடியிருப்புக் கட்டடங்கள்)
* நீலாங்கரையில் உள்ள வீடு பரப்பு 17,100 சதுர அடி. அதில் கட்டடப் பரப்பு 18,633 சதுர அடி ஆகும். இது பூர்வீகமான ெசாத்து. இந்த இடத்தில் கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.18.73 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.20 கோடி.
* சாலிகிராமத்தில் உள்ள பூர்வீ வீடு 3420 சதுர அடியாகும். அதில், கட்டடப் பரப்பு 6912 சதுர அடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.1.83 கோடி.
* சாலிகிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டின் பரப்பு 3420 சதுர அடி. அதில், கட்டடப் பரப்பு 6744 சதுர அடியாகும். இது 1998ல் விஜய் வாங்கியது. சொத்து வாங்கப்பட்டபோது அதன் விலை ரூ.12 லட்சம். கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடுரூ.31.96 லட்சம். சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.1.80 கோடி.

* மைலாப்பூரில் உள்ள வீட்டின் 8762 சதுர அடி குடியிருப்பு(எம்ஆர்சி.நகரில் உள்ள சொகுசு வீடு). இது 2021ல் வாங்கப்பட்டபோது இதன் மதிப்பு. ரூ.97.21 லட்சம் மட்டுமே. கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.41.33 லட்சம். இந்த சொகுசு வீட்டின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.45 கோடி. அதில் வாங்கப்பட்டபோதின் மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பு சேர்த்தால், ரூ.1.38 கோடி என்று கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் தற்போதைய மதிப்பு ரூ.45 கோடியாம். அதாவது 5 ஆண்டுகளில் 32 மடங்கிற்கு மேல் விலை உயர்ந்ததாக கணக்கு காட்டியுள்ளர். இதனால் பத்திரப்பதின்போது சந்தை மதிப்பை குறைத்துக் காட்டி வாங்கினார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
* பெசன்ட் நகர் ஊரூரில் வீட்டின் பரப்பு 2127 சதுர அடி. 2007ல் வாங்கியபோது, அதன் மதிப்பு ரூ.1.35 கோடி. கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு இல்லை
அதன் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும்.

* தரமணியில் உள்ள வீட்டின் கட்டடப் பரப்பு 1700 சதுர அடி. 2000ல் வாங்கப்பட்டபோது விலை ரூ.18.70 லட்சம். அதில் கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.89.12 லட்சம். தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.
* சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டின் பரப்பு 7200 சதுர அடி. அதில், கட்டடப் பரப்பு 6800 சதுர அடி. 2015ல் வாங்கப்பட்டபோது விலை ரூ.4.50 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.6 கோடி.
* சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டின் பரப்பு – 12000 சதுர அடி. அதில், கட்டடப் பரப்பு – 300 சதுர அடி. 2009ல் சொத்து வாங்கப்பட்டபோது விலை ரூ.2.05 கோடி. கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.13.71 லட்சம். சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.
* சென்னை அருகில் உள்ள படுர் கிராமத்தில் உள்ள நிலத்தின் பரப்பு 2.65 ஏக்கர். அதில், கட்டடப் பரப்பு ஒரு லட்சத்து 2108 சதுர அடி. இந்த நிலத்தை 2016ல் வாங்கியபோது, அதன் விலை ரூ..11.51 கோடியாகும். சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.15 கோடியாகும். இங்குதான் விஜய் வித்யாஸ்ரமம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார். ஆனால் பள்ளியைப் பற்றி அதில் அவர் குறிப்பிடவில்லை. வெறும் கட்டிடம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அதுவும் வணிக கட்டிடம் என்ற கூட குறிப்பிடவில்லை.

* கொரட்டூரில் உள்ள நிலத்தின் பரப்பு 18573 சதுர அடி. அதில், கட்டடப் பரப்பு 5000 சதுர அடி. 2009ல் வாங்கப்பட்டபோது அதன் விலை ரூ.1.95 கோடி. கட்டுமானம் மூலம் நிலத்தில் செய்யப்பட்ட முதலீடு ரூ.7.84 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.10 கோடி. ஏனைய சொத்தின் மூலம் வட்டி போன்ற எதுவும் பெறப்படுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட குடியிருப்புக் கட்டடங்கள் மொத்த மதிப்பு: ரூ.115 கோடி.
விஜய்யின் மனைவிக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட குடியிருப்புக் கட்டடங்கள்:
* தரமணியில் உள்ள வீடு கட்டடப் பரப்பு 1300 சதுர அடி. 2000ம் ஆண்டில் வாங்கப்பட்டபோது அதன் விலை ரூ.17 லட்சம். சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.2.50 கோடிாகும். மேலும், அந்த மனுவில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகைகள் எதுவும் பாக்கி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

நடிப்பு தொழிலை மறைத்த விஜய்
விஜய் தன்னுடைய தொழில் என்ற பகுதியில் சுய தொழில் என்று குறிப்பிட்டார். நடிகர் என்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஏன் தொழிலை மறைத்தார் என்று தெரிவயில்லை. மேலும், அவர் விஜய் வித்யாசிரம் பள்ளியின் தாளாளர், ஜெயாநகர் ப்ராபர்ட்டி ப் லிட் மேலாண்மை இயக்குநர் மற்றும் வித்யா சாரிடபுள் டிரஸ்ட், விஜய் சாரிடபுள் டிரஸ்ட், சாய் விஜய் சாரிடபுள் டிரஸ்ட் ஆகிய டிரஸ்ட்களில் டிரஸ்டியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு சுயதொழில்), வட்டி மற்றும் சொத்துக்களின் வாடகை மூலம் வருவாய் வருவதாக கூறியுள்ளார்.

குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்
சங்கீதா (மனைவி) ரூ.12.60 கோடி
சந்திரசேகர் (அப்பா) ரூ.3.02 கோடி
ஷோபா (அம்மா) ரூ.87.12 லட்சம்
ஜேசன் சஞ்சய் (மகன்) ரூ.8.78 லட்சம்
திவ்யா சாஷா (மகள்) ரூ.4.6 லட்சம்

விஜய் கொடுத்த கடன்கள்
* சுனில் ராஜ் ரூ.1.50 கோடி
* புஸ்ஸி என்.ஆனந்த் ரூ.3 கோடி
* ரவிச்சந்திரன் ரூ.5 கோடி
* ஏஎல்பி ஆண்டானியஸ் பிரிட்டோ ரூ.20 கோடி
* கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை ரூ.20 கோடி
* கீரீன் லீப் இன்போடெக் ரூ.2.34 கோடி
* ஜெயா நகர் பிராபர்ட்டி பி லிட் ரூ.94 லட்சம்
* அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ரூ.3,02 கோடி
* அம்மா சோபா சந்திரசேகர் ரூ.87.12 லட்சம்
* மனைவி சங்கீதா விஜய் ரூ.12.60 கோடி
* மகன் ஜேசன் சஞ்சய் ரூ.8 லட்சத்து78 ஆயிரத்து 479
* மகள் திவ்யா சாசா 4,60,000
* வித்யா சாரிடபுள் டிரஸ்ட் ரூ.5.84 கோடி
* விஜய் வித்யாசிரம் ரூ.24.96 லட்சம்

சந்தை மதிப்பை குறைத்துக் காட்டிய விஜய்
விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பு விவரங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதில், தற்போதைய சந்தை மதிப்பு என ஒரு விலையைக் ஒவ்வொரு சொத்துக்கும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பை விட அடிமட்ட விலையாக உள்ளது. பெரும்பாலான சொத்துக்களில் சந்தை மதிப்பு என அவர் குறிப்பிட்டது, அந்த இடத்துக்கான பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட வழிகாட்டி மதிப்பாகவே உள்ளது. சந்தை மதிப்பு இதை விட 2 முதல் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால், விஜய்யின் உண்மையான சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பள்ளிக்கூடத்தை வீடு என கணக்குக் காட்டும் விஜய்?
விஜய் தனது வேட்பு மனுத் தாக்கலில் இணைத்துள்ள தனது சொத்து விவரத்தில் சென்னை அடுத்த படூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட குடியிருப்புக் கட்டடங்கள் என்ற பிரிவில் படூரில் உள்ள சொத்தின் விவரத்தைக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் பரப்பு 2.65 ஏக்கர். கட்டடப் பரப்பு 1 லட்சத்து2108 சதுர அடி. வாங்கப்பட்ட ஆண்டு 2016. சொத்து வாங்கப்பட்டபோது விலை ரூ.11.51 கோடி. சொத்தின் தற்போதைய தோராயமான சந்தை மதிப்பு ரூ.15 கோடி. இதில், கூறியுள்ளதன் அடிப்படையில் ஒரு வீடு 1 லட்சம் சதுர அடியில் உள்ளதை நம்பும் வகையில் இல்லை. மேலும், விஜய் தாளாளராக உள்ள விஜய் வித்யாஷ்ரம் பள்ளி படூரில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தனது பள்ளியை நேரடியாகக் குறிப்பிடாமல் அதைக் குடியிருப்பும் எனக் குறிப்பிட்டு மறைத்துள்ளாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக்கும் போகவில்லை கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்
நடிகர் விஜய், பள்ளிகளில் படித்தபோது 10ம் வகுப்பு(1989), மற்றும் பிளஸ்2 (1991) ஆகிய தேர்வுகளை தனித்தேர்வராக எழுதியுள்ளார். இவர் ஏன் பள்ளி செல்லவில்லை என்று தெரியவில்லை. டுட்டோரியல் மூலம் படித்த தேர்வு எழுதினாரா என்றும் தெரிவியவில்லை. மேலும், லயலோ கல்லூரியில் பிஎஸ்சி சேர்ந்தார். 1992ம் ஆண்டுடன் கல்லூரியில் இருந்து இடையில் நின்று விட்டார். இதனால் அவர் முதலாம் ஆண்டு மட்டுமே படித்துள்ளர். கல்லூரி படிப்பை அவர் முடிக்கவில்லை என்றும் இந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags : Pramana ,Vijay ,Chennai ,Tamil Nadu ,Victory Club ,
× RELATED குறுகிய சாலையில் அனுமதி கேட்கும் தவெக;...