×

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வாக்குசேகரிப்பு, அனுமதியின்றி ரோடு ஷோ பெரம்பூர், கொளத்தூர் பிரசாரத்தில் விஜய் விதிமீறல்: பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

* வெயில் தாங்க முடியாமல் போலீசார் மீது பழிபோட்டு பாதியிலேயே எஸ்கேப்

சென்னை: பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் செய்த நிலையில் அனுமதி மீறி ரோடு ஷோ நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் போலீசார் மீது பழியைபோட்டுவிட்டு பாதியிலேயே விஜய் எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கலை கல்லூரியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நேற்று 10.30 மணியிலிருந்து 12 மணி வரை எமகண்டம் என்பதால் எமகண்டம் முடித்து 12.10க்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜோசப் விஜய். அவருடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் சிவா உள்ளிட்டோர் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்து 12.25க்கு வெளியே வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு நேராக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்று பிரசாரம் நடைபெறும் என கூறியிருந்தனர். ஆனால், வேட்பு மனுவை தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாக கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரோடு ஷோவுக்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால், சாலையில் நடந்து சென்றால் அல்லது வாகனத்தின் மீது ஏறி தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தால் தான் அது ரோடு ஷோ. வாகனத்தில் உள்ளே அமர்ந்து கைகாட்டி சென்றால் அது ரோடு ஷோ கிடையாது என்ற நினைப்பில் புதுவிதமாக யோசித்து ரோடு ஷோ நடத்தினர். இதனால் அம்பேத்கர் கல்லூரி சாலை முதல் எம்கேபி நகர் கொடுங்கையூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆம்புலன்சும் சிக்கியது.

கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையில் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், முன்கூட்டியே 1.05 மணியளவில் விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் எல்லா இடங்களும் எனக்கு விருப்பமான இடம்தான், என்றாலும் ஒரு சென்டிமென்ட் காரணமாக நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை ஸ்டார்ட் பண்றேன். ஜென்சி கிட்ஸ் வரும் 23ம் தேதி முதல் ஆளாக போய் விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்க. இது ஒருதலைமுறைக்கான தேர்தல்.

உங்களுக்கான தேர்தல், எவ்வளவு பெரிய வசதி இருந்தும் எல்லாவற்றையும் உதறிவிட்டு உங்களுக்காக வந்துள்ளேன். எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு வந்துள்ளேன். ஒரு நாளும் உங்களை ஏமாற்ற மாட்டேன். நான்கு முனை போட்டி 40 முனை போட்டி என பலர் உருட்டினாலும் இங்கு இரண்டு முனை போட்டி தான் உள்ளது. டிவிகே – டிஎம்கே மட்டும்தான் போட்டி என பேசினார். 1.05 மணியளவில் பேச ஆரம்பித்த விஜய் 1.20 தனது பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு கிளம்பினார். விஜய் பெரம்பூரில் இருந்து கிளம்பிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொளத்தூரில் குவிய தொடங்கினர்.

ஆனால் 1.20 மணியளவில் பெரம்பூரில் இருந்து கிளம்பிய விஜய் மாலை 3.40 மணியளவில் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார். பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார். கொளத்தூரில் மாலை 3.40 மணியளைவில் பேச்சை தொடங்கிய விஜய், ‘அனைவருக்கும் வணக்கம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரபு அவர்களுக்கு வாக்களியுங்கள்’. பிரபு அவர்கள் வேறு நான் வேறு இல்லை நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் நன்றி என பேசி முடித்தார். வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். அதுவும் கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபு பெயருக்கு பதிலாக பிரபு என்று தவறுதலாக மாற்றி கூறிவிட்டு அங்கிருந்து வில்லிவாக்கம் சென்றார்.

ஆனால் வில்லிவாக்கத்திற்கு செல்லாமல் பாதியிலேயே பிரசாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார். கொளத்தூரில் பிரசாரம் செய்ய மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 3.40 மணிக்கு வந்து 3.45 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்தார். போலீசார் குறித்து கொடுத்த குறிப்பிட்ட அந்த இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சாலையில் நடுவே பிரசார வாகனத்தை நிறுத்தி ஐந்து நிமிடங்கள் பேசியதால் அந்த இடம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய் கிளம்பியதால் அவரை பார்க்க முண்டியடித்த பொதுமக்கள் பலரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில், பலர் மயக்கம் அடைந்தனர். சூளை பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி (18) என்ற பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று சுமார் ஒரு சிறுமி உள்பட 10 பெண்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அவர்களை தண்ணீர் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

* திருந்தாத ரசிகர்கள்: போலீசார் அவதி
ஒவ்வொரு முறையும் விஜய் தனது பிரசாரம் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்தும்போது பல்வேறு விதங்களில் போலீசார் பாதிக்கப்படுகின்றனர். நேற்று அம்பேத்கர் கலைக் கல்லூரியில் இருந்து ரோடு ஷோ என்ற பெயரில் விஜய் வாகனத்தில் மெதுவாக சென்றபோது பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அப்போது, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சாலையில் இறங்கி பொதுமக்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தினர். அப்போது தவெகவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தவெக நிர்வாகி வைத்திருந்த கொடி, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் கண்ணில் குத்தியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோன்று பல இடங்களில் போலீசார் கடும் அவதி அடைந்தனர்.

* தண்ணீர் இல்லை
கொளத்தூர் அகரம் சந்திப்பில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நிர்வாகிகள் நீண்ட நேரமாக காத்துக் கிடந்ததால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து சிலர் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். அப்போது கடைக்கு சென்று தண்ணீர் வாங்க முடியாத சூழ்நிலையில் கூட்டம் முழுவதுமாக நின்றது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என கேட்க தொடங்கினர். கூட்டத்தில் இருந்த சிலர் அனைவரையும் முந்திக்கொண்டு தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தனர். அதனை பார்த்ததும் அனைவரும் தண்ணீர் தண்ணீர் என கூச்சலிட்டனர். தண்ணீருக்காக அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* சாலையில் சிதறிக்கிடந்த செருப்புகள்
கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக பிரசார வாகனத்தின் மீது வரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அவர்கள் அணிந்திருந்த காலணிகள் சாலையில் சிதறிக்கிடந்தன. பிரசார வாகனம் சென்றவுடன் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட காலணிகளை துப்புரவு பணியாளர்கள் அதன் பிறகு அகற்றினர்.

* ஆபத்தை உணராத இளைஞர்கள்
இந்த முறையும் தவெக ரசிகர்கள், தொண்டர்கள் ஆபத்தை உணராமல் பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் மின் பெட்டிகள் மற்றும் போலீசார் ஏற்படுத்திய தடுப்புகள் மீது ஆபத்தான முறையில் ஏறி விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தங்களது உயிரை பணயம் வைத்தனர். போலீசார் பலமுறை கூறியும் அவர்கள் இறங்க மறுத்தனர். போலீசார் அவர்களை இறங்குமாறு கூறிய போது காதில் விசில் எடுத்து ஊதி போலீசாரை வெறுப்பேற்றினர்.

* கூட்ட நெரிசலில் செல்போன், பணம் பறிப்பு
கொடுங்கையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்த லதா (42) என்ற பெண் பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வியாசர்பாடி கரிமேடு 1வது தெருவை சேர்ந்த இளவேனில் (25) என்ற பெண் விஜய்யை பார்ப்பதற்காக வந்து எம்ஆர் நகர் சந்திப்பு பகுதியில் தனது ஒன்றரை சவரன் தாலி சரடை தொலைத்தார். கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 5வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த நந்தினி (17) என்ற பெண் எம்ஆர் நகர் சந்திப்பு பகுதியில் தனது ஸ்மார்ட் போனை தொலைத்தார். இதேபோன்று மாதவரம் சங்கரபாணி தெருவை சேர்ந்த கிஷோர் (28) என்பவர் தனது ஸ்மார்ட் போனை தொலைத்தார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் எம்கேபி நகர் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது ரூ.20 ஆயிரத்தை விஜய்யை பார்க்க சென்றபோது எம்கேபி நகர் மீனாம்பாள் சாலையில் தொலைத்துள்ளார். இதேபோல், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (36) என்பவர் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ரூ.50 ஆயிரத்தை தொலைத்தார். இவர்கள் அனைவரும் கொடுங்கையூர் மற்றும் எம்கேபி நகர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

Tags : Vijay ,Perambur ,Kolathur ,Chennai ,Thaweka ,
× RELATED 234 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்...