10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை, பிப்.18: புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கவேண்டும். துணை வட்டாட்சியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ரூ.1,300, முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு ரூ.9,300, இணையான ஆரம்ப ஊதியம் ரூபாய் 36,900 மற்றும் அலுவலக உதவியாளர் பதிவுரு எழுத்தாளர்களுக்கு தனி ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டம் பாதிப்புகளை உடன் சரி செய்திட வேண்டும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (17ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு பணிக்கு யாரும் வராததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய் துறையினரின் இந்த போராட்டத்தால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வருவாய் சங்கத்தினரின் இந்த போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உடனடியாக தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் எனவும் வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் 12,000 வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: