×

வையப்பமலை மகா மாரியம்மன் கோயில் திருவிழா பூசாரியிடம் சாட்டை அடி வாங்கிய பக்தர்கள்

மல்லசமுத்திரம், மார்ச் 27: வையப்பமலை மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய வினோத வழிபாடு நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் கோயிலில், கடந்த 17ம்தேதி கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை தீர்த்தகுடம் ஊர்வலம் நடந்தது. இரவு 6 மணிக்கு அன்னதானம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 3 மணிக்கு அக்னிசட்டி, முளைப்பாரி ஊர்வலம், மேளக்கச்சேரி, நையாண்டி, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இன்று காலை பொங்கல் வைத்தல், மாலை அம்மன் ஊர்வலம், அலகு குத்துதல் நடைபெறும். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.

Tags : Vaiyappamalai Maha Mariamman Temple festival ,Mallasamuthiram ,Maha Mariamman Temple ,Vaiyappamalai hill ,
× RELATED நாமக்கல் மாவட்ட எல்லையில் வெறிச்சோடிய சோதனை சாவடி