திருச்செங்கோடு, மார்ச் 28: திருச்செங்கோடு சத்தியநாயக்கன்பாளையத்தில் மணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று பொருட்கள் வாங்க வந்த வாலிபர் ஒருவர், திடீரென கத்தியை காட்டி, மணியிடம் பணம் கேட்டு மிரட்டினார். அப்போது டவுன் இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன் தலைமையில், அப்பகுதியில் ரோந்து பணி வந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மலை சுற்றுபாதையில் உள்ள எம்ஜிஆர் நகர் சேர்ந்த சக்கரவர்த்தி (27) என்பது தெரிய வந்தது. இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில், அவரை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ரங்கராஜ், அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் சக்கரவர்த்தியை திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே, காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
