திருத்துறைப்பூண்டி, மார்ச் 28: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. அதை தவற விடக்கூடாது என்பதை வலியுறுத்தி அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர்கள் ராஜலட்சுமி மற்றும் கண்ணகி ஆகியோர் தலைமையில் ஊராட்சித் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்,
பொது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வடிவேல், சத்துணவு மேலாளர் செல்வி உள்ளிட்டோர் முன்னிலையில் அலுவலக வாசலில் சத்துணவு ஊழியர்கள் சார்பாக பிரம்மாண்ட ரங்கோலி வரையப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் சத்துணவு ஊழியர்கள் சமையலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
