புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பீதியில் வடமாநிலங்கள் முழுவதும் பைக், கார்களில் பெட்ரோல் நிரப்ப மக்கள் குவிவதால் பெட்ரோல் பங்குகள் முடங்கி வருகின்றன. இதற்கிடையே கொரோனா காலம் போல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி பீதியை ஏற்படுத்தியது. இதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’ உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான களநிலவரங்களை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சவால்களை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இந்தியாவில் பொதுமுடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். இந்திய அரசாங்கத்திடம் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை.
இதுபோன்ற காலங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம். வதந்திகளைப் பரப்பி பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுப்பற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை’என்று தெரிவித்துள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில்,’ஊரடங்கு போன்ற ஒரு சூழல் தற்போது இல்லை. அது குறித்து பரிசீலிக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் சில பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் மற்றும் எல்பிஜி விநியோக மையங்களில் மக்கள் பதற்றத்துடன் பொருட்களை வாங்குவதும், நீண்ட வரிசைகளில் நிற்பதும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளாலேயே நடக்கிறது.
இங்கே எந்தவிதமான நெருக்கடியோ அல்லது தட்டுப்பாடோ இல்லை. எங்களிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் (பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்) கையிருப்பு உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்புகளும் போதுமான அளவில் உள்ளன; எல்பிஜி விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதுடன், அவை வழக்கம்போலவே செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல் அல்லது டீசல் விநியோகத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. எழும் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். நம்மிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, இது நெருக்கடிக்கு முந்தைய அளவில் 70 சதவீதத்திற்கு வணிக எல்.பி.ஜி ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு நம்பிக்கையை அளித்துள்ளது’ என்றார்.
* நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் விளக்கம்
நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,’ டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, கூடுதல் நிதி ஆதாரங்களை ஏற்படுத்த உள்ளோம். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித உயர்வும் ஏற்படவில்லை.
இந்தியக் குடிமக்கள் மீது எவ்விதமான கூடுதல் சுமையையும் சுமத்தக்கூடாது என்று பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் அதற்கேற்பவே செயல்பட்டு வருகிறோம். இதன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகள் முற்றிலும் மாறாமல் உள்ளன. அவை அதிகரிக்கவில்லை. மாறாக, அரசாங்கம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதையும், விநியோகம் தடையின்றி நடைபெறுவதையும் உறுதிசெய்கிறது.
இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். வரும் காலங்களில், கூடுதல் வரி அல்லாத வருவாயைத் திரட்டுவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து அதிகரிப்போம், மேலும் நாட்டின் நிதி நிலையை கவனமாக நிர்வகிக்க எங்கள் அரசாங்கம் விழிப்புடன் இருக்கும். சில அரசியல்வாதிகள் ஊரடங்கு இருக்கும் என்று வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை. இந்த ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதையும், மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்குவதையும் நிறுத்துங்கள். மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரின் காரணமாக பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் நமது குடிமக்கள் எந்தப் பிரச்னைகளையும் சந்திக்காத வகையில் நாங்கள் நிலைமையை நன்கு நிர்வகித்து வருகிறோம்’ என்றார்.
