×

சீட் தராமல் பழிவாங்கிய எடப்பாடி; டெல்லியில் அண்ணாமலை பரபரப்பு புகார்: திட்டமிட்டு பாஜவுக்கு தோக்குற தொகுதிகளை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் 9 தொகுதிகள் அதிமுகவிற்கும், பாஜ ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவையை குறி வைத்தனர்.

அதனால் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தெற்கு தொகுதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அண்ணாமலைக்கு ஒரு தொகுதி, வானதி சீனிவாசனுக்கு ஒரு தொகுதி பெற்றுவிட வேண்டும் என பாஜவினர் தீவிரமாக இருந்தனர். அண்ணாமலை கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட தயாராக இருந்தார். ஆனால் இந்த முறையும் அதிமுக கூட்டணியில் கோவையில் ஒரு தொகுதி வடக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் வானதி சீனிவாசன் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். இதன் காரணமாக அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜ மேலிட தலைவர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கட்சி மேலிடம் அண்ணாமலையின் பக்கம் இருந்துள்ளது. அண்ணாமலைக்காக அதிமுகவிடம் பேசி உள்ளது.

அதன்படி சில குறிப்பிட்ட தொகுதிகளை அடையாளம் காட்டி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாஜ மேலிடம் அதிமுகவிடம் கோரியது. அதில் மிகவும் முக்கியமான தொகுதிகள் என்றால் கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட தொகுதிகளாகும். கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். அண்ணாமலை தோற்றாலும் கூட மொத்தம் 4.50 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.

இதனால் அந்த தொகுதிகளை பாஜ கேட்டது. ஆனால், பாஜ கேட்ட சிங்காநல்லூர், சூலூர் கவுண்டம்பாளையம் ஆகிய 3 தொகுதிகளையும் டிக் அடிக்கவில்லை. அதற்கு பதிலாக கோவை வடக்கு தொகுதியை மட்டுமே வழங்கினார். கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தனது முடிவே இறுதியானது என எடப்பாடி கூறி விட்டார். அதற்கு பாஜவும் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 9ல் அதிமுகவினரும், கோவை தெற்கில் கூட்டணியில் இருந்த பாஜவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர்.

இதனால் கோவை மாவட்டத்தை பாஜவுக்கு விட்டு கொடுக்கக்கூடாது என்று எடப்பாடி நினைத்து இருந்தார். ஏனென்றால் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக தனித்தனி அணியாக களம் கண்டது. அதில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 ஓட்டுகள் பெற்று வென்றார். ஆனால் அதிமுகவை பின்னுக்கு தள்ளி அண்ணாமலை 2ம் இடம் பிடித்தார். அவர் 4,50,132 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் சென்றார்.

இதனால் கோவையில் அண்ணாமலைக்கு சீட் வழங்குவது எதிர்காலத்தில் அதிமுகவின் பலத்தை குறைக்கும் என்று எடப்பாடி நினைத்துள்ளார். இதனால் தான் கோவையில் அண்ணாமலைக்காக பாஜ கோரிய இடங்களை அவர் ஒதுக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ல் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு என 4 தொகுதிகளை பாஜவுக்கு தள்ளி விடப்பட்டுள்ளது.

இதேபோல கிணத்துக்கடவு தொகுதி தனக்கு கிடைக்கும் என அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான வசந்தராஜன் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைப் பயன்படுத்தி அண்ணாமலை அரசியல் காய் நகர்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தொகுதி ஒதுக்கீடு குறித்து பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ்க்கு எடப்பாடி மீது பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை இமெயில் மூலம் அண்ணாமலை அளித்து உள்ளார். அதில், ‘‘பாஜவுக்கும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. குறிப்பாக பாஜவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொண்டர்களுக்கு திருப்தி இல்லை. அனைவரும் அதிருப்தில் உள்ளார்கள்.

பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 7 தொகுதி கூட வெற்றி பெறுவது சந்தேகம். அதிமுக போட்டியிட்டு தோல்வியுற்ற தொகுதிகளை பாஜ தலையில் கட்டிவிட்டது. குறிப்பாக திமுக, காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளை பாஜவுக்கு அதிமுக திட்டமிட்டே ஒதுக்கி உள்ளது. திமுகவின் கோட்டையாக உள்ள திருவண்ணாமலை பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், கட்சி வளர்ந்து வரும் அல்லது வளரக்கூடிய தொகுதிகள் அல்ல.

இது ஆளும் திமுகவுக்கே சாதகமாக அமையும்பாஜ வலுவாக உள்ள கோவையில் 1 தொகுதியும், திருப்பூரில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது கட்சி வளர்ச்சியை பாதிக்கும்.எனக்கு போட்டியிட விருப்பமில்லை. எனக்காக எந்தத் தொகுதியையும் ஒதுக்க வேண்டாம். பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே, பாஜவுக்கான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது’’ என்று மேலிடத்திடம் அண்ணாமலை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு கூட்டணியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Edappadi ,Annamalai ,Delhi ,Baja ,Adimuka ,Tamil Nadu Assembly ,Goa ,Adamuwa ,
× RELATED மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம்...