×

கேரளாவுக்கு படையெடுக்கும் மோடி, ஒன்றிய அமைச்சர்கள்

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இடதுசாரி கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கவும், 10 வருடங்களாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் கூட்டணி இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்திலும் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக தேசிய தலைவர்கள் கேரளாவுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோழிக்கோட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பிரதமர் மோடி நாளை (29ம் தேதி) கேரளா வருகிறார்.

பாலக்காடு மற்றும் திருச்சூரில் நடைபெறும் வாகன பேரணி மற்றும் ரோட் ஷோவில் அவர் பங்கேற்கிறார். 4ம் தேதி மீண்டும் கேரளா வரும் அவர் கோட்டயம் மாவட்டம் பாலா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 31ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் கேரளா வரும் அவர் ஹரிப்பாடு, திருப்பூணித்துறா, கோழிக்கோடு மற்றும் தலச்சேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். பாஜ தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் ஒன்றிய அமைச்சர்களான நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கர், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பிரசாரத்திற்காக கேரளா வருகின்றனர்.

Tags : Modi ,Union ,Kerala ,Left ,Congress ,BJP ,
× RELATED மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம்...