×

மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: மேற்கு ஆசியா போரால் ஏற்படும் சவால்களை சமாளிக்க டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மேற்கு ஆசியா போரால் எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மேற்கு ஆசியா போரால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில முதல்வர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. ஈரான் போர் பாதிப்பு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான மாநிலங்களின் தயார்நிலை மற்றும் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். ‘டீம் இந்தியா’ உணர்வுடன், அனைத்துத் தரப்பு முயற்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதே இந்தக் காணொலி வாயிலான கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த காணொலி கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட பல முதல்வர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இக்கூட்டத்தில் உடனிருந்தனர்.

* ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைத்தது அரசு
மேற்கு ஆசிய மோதலால் எழும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்களின் முறைசாரா குழு ஒன்றை அரசு அமைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : ministers ,PM ,Modi ,Team India ,Iran ,New Delhi ,West Asia war ,West Asia ,US ,Israel ,
× RELATED அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்...