புதுடெல்லி: ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கும் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் நடைமுறைகளை நிறைவு செய்யும் வகையில் 2026ம் ஆண்டு நிதி மசோதா கடந்த 25ம் தேதி மக்களவையில் 32 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது சுருக்கமான விவாதம் நடத்தப்பட்டது. இதனையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.
இதனைதொடர்ந்து 2026ம் ஆண்டு நிதி மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 2026-2027 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் மொத்தம் ரூ.53.47லட்சம் கோடி செலவினத்தை எதிர்பார்க்கின்றது. இது மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டின் செலவினத்தைவிட 7.7சதவீதம் அதிகமாகும். அடுத்த நிதியாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மொத்த மூலதனச் செலவு ரூ.12.2லட்சம் கோடியாகும்.
இந்த மசோதா ரூ.44.04லட்சம் கோடி மொத்த வரி வசூலையும் ரூ.17.2லட்சம் கோடி மொத்தக் கடன் பெறுதலையும் முன்மொழிகின்றது. 2027ம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் இருந்த 4.4சதவீதத்தை விடக் குறைவாகும். நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கும் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு பெற்றது.
