×

இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து வீடியோ மற்றும் பதிவு செய்யும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் புகார்

சென்னை: இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக சித்தரித்து வீடியோ மற்றும் பதிவுகள் செய்து வரும் தவெகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ரஞ்சனா நாச்சியார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நடிகை சிவரஞ்சனா (எ) ரஞ்சனா நாச்சியார் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்ற நடிகரும், அரசியல்வாதியுமான ஜோசப் விஜய் வழிநடத்தும் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின், பெண் தலைவர்களில் ஒருவாராக பதவி வகித்தேன். பொதுமக்களுடன் கலந்துரையாடி கட்சியின் நலனுக்காக பணியாற்றினேன். கட்சியின் தலைவர் பெண் கட்சி தொண்டர்களிடம், மரியாதையின்றி நடந்து கொண்டது, அணுகுவதற்கு எளிமையற்ற தன்மை, கருத்துகளும் மதிப்பளிக்காத மனப்பான்மை மற்றும் பொதுமக்கள் சமூகத்தின் நலனில் கட்சிக்கு அக்கறையின்மை போன்ற காரணங்களுக்காக நான், அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.

அதன் பிறகு திமுகவில் இணைந்துள்ளேன். இதனால் என்னை சிலர் தனி நபர்களால் தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் நடிகர் விஜய்யின் தீவிர ஆதரவாளர்களான தவெகவினர் தான் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை, நான் பொதுமக்களுக்கு ஆற்றிவரும் நம்பகமான சேவையின் மீதான நேரடி தாக்குதலாகும்.

இதுபோன்ற நபர்களால் எனது அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல எனது தனிப்பட்ட நற்பெயரும், கண்ணியமும் களங்கப்படுகிறது. திருச்சி கார்த்திக் என்ற இன்ஸ்டாகிராம் ஐடியை கொண்ட கார்த்திக் குமார், ரீல்ஸ் வீடியோ மூலம் நான் அவருடைய சகோதரி என்று பொய்யாக கூறி, என் மீது அவதூறு பரப்பியுள்ளார். என்னுடன் நெருங்கிய தனிப்பட்ட உறவை கொண்டிருப்பதாக கூறி, எனது நடத்தையில் ஏமாற்றமடைந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல் திருச்சி கார்த்திக், சுகன்யா வினோத், சதம் ஹீசேன், பொறியாளர் வீர விஜய், பாலாஜி பாலா, மாதா சாமி, ஜென் இசட், பால ரமேஷ், நரேந்திரகுருசேகர் உள்ளிட்ட 13 பேர் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் என்னை பற்றி தவறாக சித்தரித்து பேசியும், பதிவுகள் செய்தும் வருகின்றனர். எனவே என்னை தவறாக சித்தரித்து தொடர்ந்து பதிவு செய்து வரும் தவெகவை சேர்ந்த 13 நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

Tags : Instagram ,Ranjana Nachiyar ,Police Commissioner's Office ,Chennai ,Chennai Police Commissioner's Office ,Chennai… ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...