பரமக்குடி, மார்ச் 24: தமிழ்நாட்டில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்றார். அதில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 க்கான வாக்குபதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பயிற்சி வகுப்பில் நன்கு தெரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண பெருமாள், வட்டாட்சியர்கள் வரதன், ராமமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
