×

கம்பம், கடமலைக்குண்டு பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

 

 

கம்பம்/வருசநாடு, மார்ச் 24: கம்பத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கம்பத்தில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரால்டு அலெக்சாண்டர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொடங்கிய அணிவகுப்பானது விவேகானந்தர் தெரு, தங்கவிநாயகர்கோவில், புதுப்பள்ளிவாசல், கம்பம்மெட்டு ரோடு, நாட்டுக்கல், நகராட்சி தெரு, எல்.எப்.ரோடு வழியாக கம்பம் அரசமரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் நிறைவடைந்தது.
இதே போல், கடமலைக்குண்டு கிராமத்தில், நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. கடமலைக்குண்டு வைகை ஆற்று பாலத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு, தேனி சாலை வழியாக மேலப்பட்டி பிரிவு வரை சென்றது. இதில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் சீருடையில் அணிவகுத்துச் சென்று தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உறுதி செய்தனர்.

Tags : Kambam, ,Kadamalaikundu ,Kambam ,Varusanadu ,Tamil Nadu Assembly ,Kambam… ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது