புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான ‘‘பாட்டாளி மக்கள் கட்சி”, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பிலான ஒரு அணியாகவும் ராமதாஸின் மகன் அன்புமணி தரப்பில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு ‘‘மாம்பழம்” சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான கடிதத்தை அனுப்பியதால் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அங்கீகரித்தது என அன்புமணி தரப்பினர் கொண்டாடினர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சி யாருக்கு என்ற முடிவு தெரியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அன்புமணி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக மீண்டும் சிவில் நீதிமன்றத்தை நாடி 2 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இரு தரப்பும் தாக்கல் செய்யக்கூடிய மனுக்கள் அடிப்படையில் சிவில் நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த பிறகு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரு தரப்பு வக்கீல்களையும் பார்த்து, நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது என சிரித்தபடி கூறினார். நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது.
