- அசாம் காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கௌரவ் கோகாய்
- சட்டசபை
- ஜோர்கட்
- ஜார்ஜ் டவுன்
- மக்களவை
- அசாம் மாநில காங்கிர
- அசாம் சட்டம்
ஜோர்காட்: அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்தார். ஜோர்காட் தொகுதியில் அவர் மனு செய்தார். மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள கவுரவ் கோகாய், தற்போது அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அவர் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கி உள்ளார். ஜோர்காட் தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று அவர் சட்டப்பேரவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்தார்.
ஜோர்காட் மைதானத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய புறப்படும் முன்பு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் பேரணி புறப்பட்டது. மக்கள் வெள்ளத்தில் வாகனம் மிதந்து சென்றதால் மனுத்தாக்கல் செய்யும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. இதில் ராய்ஜோர் தளம், அசாம் ஜாதியதாபாடி கட்சி, மார்க்சிஸ்ட், சிபிஎம்எல், அனைத்துக் கட்சி மலைவாழ் மக்கள் தலைவர்கள் மாநாடு ஆகிய கட்சிகளை சேர்ந்த திரளான தொண்டர்களும் தங்கள் கட்சி கொடிகளுடன் பேரணியில் கலந்து கொண்டனர். இதேபோல் அசாம் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அனைத்து கட்சி வேட்பாளர்கள் அனைவரும் மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மனுத்தாக்கல் செய்தனர். அசோம் கன பரிஷத் கட்சியின் தலைவரான அதுல் போரா, போக்காகத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சென்றார்.
* ஹேமந்த் சோரன் கட்சி 21 தொகுதிகளில் போட்டி
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 21 வேட்பாளர்கள் பட்டியலை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டது. ராஞ்சி சென்று காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஜேஎம்எம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
* மேற்குவங்கத்தில் ரூ.181 கோடி பணம், மது பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.181 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் துளிகள்
* ரூ.64ஆயிரம் கோடியில் 7 நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்கள்
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘நிலக்கரி உற்பத்தியில் 80சதவீதம் மின்சாரத்துறைக்கும், எஞ்சிய பகுதி பிற துறைகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது. இந்தியா நிலக்கரியை உற்பத்தி செய்வதிலும் நுகர்வதிலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. நாட்டின் நிலக்கரி இருப்பு குறைந்தது 70 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய நிலக்கரி இருப்பை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரூ.64ஆயிரம் கோடி முதலீட்டில் ஏழு நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்கள் அமைய உள்ளது” என்றார்.
* 116 நகரங்களில் 10ஆயிரம் ஏசி இ-பஸ்
மாநிலங்களவையில், துணை கேள்விகளுக்கு பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால், ‘‘பிரதமரின் இ பஸ் சேவா திட்டத்தின் கீழ் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 நகரங்களுக்கு 2027ம் ஆண்டின் இறுதிக்குள் 10ஆயிரம் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் பேருந்துகள் வழங்கப்படும். அதன் பின் மேலும் 35ஆயிரம் பேருந்துகளை வழங்குவதற்காக புதிய திட்டம் தொடங்கப்படும்” என்றார்.
* பள்ளி கல்விக் கட்டண உயர்வை தடுக்க கோரிக்கை
காங்கிரஸ் எம்பி ரஜனி அசோக் ராவ் பாட்டீல், மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது பள்ளிக் கட்டண உயர்வு விவகாரத்தை எழுப்பி பேசியதாவது, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டுப்பாடின்றி தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டணக் கட்டமைப்பு நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள குடும்பங்கள் மீது தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. கல்வி என்பது ஒரு ஆடம்பர பொருள் அல்ல. அது ஒரு அடிப்படை உரிமை. ஆயினும் இன்று பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிகள் என்று அழைக்கப்படுபவற்றில் படிக்க வைப்பது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும் அளவிற்கான நிதிச்சுமையாக மாறிவிட்டது. பள்ளிக்கட்டணங்கள் தொடர்பாக வலுவான வெளிப்படையான மற்றும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகும்” என்றார்.
* சிவில் சர்வீஸ் தேர்வு விடைக்குறிப்பு வெளியிட திட்டம்
மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வை நடத்தியப் பிறகு அதற்கான தற்காலிக விடைக்குறிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதற்கான வழிகாட்டுதல்களை யூபிஎஸ்சி வகுத்துள்ளது. 2026ம் ஆ்ணடு சிவில் சர்வீசஸ் தேர்வு முதல் நடைமுறைக்கு வரும் இந்த செயல்முறையானது யூபிஎஸ்சி நடத்தும் அனைத்துக் கட்டமைக்கப்பட்ட தேர்வுகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.
