- சிவ சுப்பிரமணிய சுவாமி
- கோவில்
- பங்குனி பிரம்மோத்ஸவம்
- கலசபாக்கம்
- பங்குனி மாத பிரம்மோத்ஸவம்
- சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
- மோட்டூர் நட்சத்திரக் கோயில்
- Elathur
- சிவசுப்ரமணியம்
- சுவாமி
- திருவண்ணாமலை
கலசபாக்கம், மார்ச் 24: கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயிலில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்திபெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாத பிரமோற்சவம் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பங்குனி மாத பிரமோற்சவம் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, 6 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடியை ஏற்றினர். தொடர்ந்து கொடிமரம் மற்றும் உற்சவ மூர்த்திக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவமூர்த்தி கோயில் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தையொட்டி தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 29ம்தேதி காலை நடைபெற உள்ளது. வரும் 31ம் தேதி தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.
