×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிப்பு பணி பக்தர்களுக்கு மீண்டும் லட்டு வழங்கப்பட்டது

திருவண்ணாமலை, மார்ச் 23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்தது. இதில் மீண்டும் லட்டு தயாரிக்கப்பட்டது. அமெரிக்கா- ஈரான் போர் எதிரொலி காரணமாக சமையல் காஸ் என்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் செயல்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படும் லட்டு பிரசாதம் மற்றும் விற்பனை மூலம் வழங்கப்படும் புளியோதரை வெண்பொங்கல், முறுக்கு, அதிரசம் போன்றவை வழங்குவது பாதிக்கப்பட்டது. அதனால், நேற்று முன்தினம் இவற்றின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், விறகு அடுப்பு பயன்படுத்தி நேற்று மீண்டும் பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, நேற்று சுமார் 22,000 லட்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. சமையல் காஸ் தட்டுப்பாடு பிரச்னை தீரும் வரை, மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், விறகு அடுப்பு பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவில் புகை வெளியேறுவதை தவிர்க்க, கோவையில் இருந்து நவீன விறகு அடுப்பு கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக லட்டு தயாரிக்கும் பணி தடைபட்டது. நேற்று முதல் மீண்டும் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டதால் வழக்கம்போல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,US-Iran war ,
× RELATED பைக்கில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.19 லட்சம் பறிமுதல் ஆரணி அருகே