×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிவாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு: பாதுகாப்பு அறைகளை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை, மார்ச் 23: திருவண்ணாமலை மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக பிரித்து அனுப்ப ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, பாதுகாப்பு அறைகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே அவகாசம் உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதையொட்டி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாக்குப்பதிவு இயந்திரம் 5858, கட்டுப்பாட்டு இயந்திரம் 3260, ஒப்புகை ரசீது இயந்திரம் 3466 உள்பட மொத்தம் 12,584 இயந்திரங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 176, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 176, ஒப்புகை ரசீது இயந்திரங்கள் 176 உள்பட 528 இயந்திரங்கள் செயல்விளக்க பயற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட 8 தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகை ரசீது இயந்திரங்கள் ஆகியவற்றை சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில், கணினி குலுக்கல் முறையில் (ரேண்டமைசேஷன்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு தொகுதிவாரியாக அனுப்பப்படும்.

அதையொட்டி, திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அறைகளில் தேவையான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே நிறைவேற்ற கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திருவண்ணாமலை தாலுகா அலுவக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள அறையை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் பலகைகள் கொண்டு மூடவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் போட வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,Collector ,Dharbagaraj ,Tamil Nadu Legislative Assembly general election ,
× RELATED பைக்கில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.19 லட்சம் பறிமுதல் ஆரணி அருகே