×

விஜய் தேவரகொண்டா ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் விஜய் தேவர கொண்டாவும் ஒருவர். அர்ஜுன் ரெட்டி, டாக்ஸி வாலா, கீதா கோவிந்தம், லைகர் போன்ற திரைப்படங்கள் மூலம் மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர் இவர். சமீபத்தில் இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடைபெற்ற திருமணம் உலக ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவுக்கு சிறு வயது முதலே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பது ஆசையாகவும் கனவாகவும் இருந்துள்ளது. எனவே, அப்போதிலிருந்தே தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார். இதற்காக, உடற்பயிற்சி, விளையாட்டு, தியானம் என முழு அர்ப்பணிப்போடு தனது உடலை பராமரித்து வருகிறார். புது மாப்பிள்ளையான விஜய் தேவரகொண்டாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்

சிறுவயது முதலே எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம் இருந்ததால், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால்தான் சினிமாவில் நிலைத்து இருக்க முடியும் என்று, அப்போதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்வதை தொடங்கிவிட்டேன். இதற்காக தினசரி அதிகாலையே ஏழுந்துவிடுவேன். பின்னர், யோகா, தியானம் எல்லாம் முடித்துக் கொண்டு காலை எழு மணிக்கெல்லாம் ஜிம் சென்றுவிடுவேன்.

அங்கே, தசை வலிமைக்காக அதிக எடைகளை தூக்குதல், கார்டியோ மற்றும் பிளைமெட்ரிக் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்கிறேன். இது தவிர, கால்பந்து, பேட்மின்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், அவையும் எனது தினசரி விளையாட்டுகளில் ஒன்றாகிவிட்டது. விடுமுறை நாட்களில் கூட நான் என்னை சுறுசுறுப்பாகவே வைத்திருப்பேன். இதற்காக, சைக்கிள் ஓட்டுதல், நீண்ட தூர நடைபயிற்சி, மலையேற்றம் போன்றவற்றை மேற்கொள்ளுவேன். இது தவிர, எனது பயிற்சியாளர் குல்தீப் சேத்தி வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு நாளும் எனது உடற்பயிற்சிகள் முறையை சுழற்சி முறையில் மாற்றிக் கொள்வேன்.

டயட்

உணவை பொருத்தவரை எனக்கு பெரிய டயட் எல்லாம் கிடையாது. அதேசமயம், நான் என்ன சாப்பிடுகிறேன். அது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதில் அதிக கவனமாக இருப்பேன். அதுபோன்று எனது தினசரி உணவில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். எனவே, அந்தந்த பருவங்களில் கிடைக்கும் காய்கறிகளை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்வேன். பருவகால காய்கறிகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்கக் கூடியது. எனவே, அனைவருமே பருவகால காய்கறிகளை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது. இது தவிர, அதிக புரதச்சத்துள்ள முட்டை, கோழி இறைச்சி மற்றும் மீன் உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வேன்.

மற்றும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வேன். அதுபோன்று வெள்ளை சர்க்கரையை எனது உணவு சார்ட்டில் இருந்து முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். அதேசமயம், எப்போதாவது ‘சீட் மீல்’ (Cheat meal) சாப்பிடுவதையும் விரும்புகிறேன். இதில் மெக்சிகன் உணவுகள், பர்கர், பிரியாணி போன்றவை கட்டாயம் இருக்கும். இதற்காக, எனது ஓய்வு நேரத்தில் பல்வேறு உணவகங்களில் மெக்சிகன் உணவை முயற்சிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அப்படியே அதிகம் சாப்பிட்டுவிட்டாலும், மறுநாளே அதற்கு தேவையான உடற்பயிற்சிகளை கூடுதலாக செய்து சமன் செய்துவிடுவேன். மேலும், படப்பிடிப்பு காலங்களில், அதிக புரதச்சத்துக்காக வே புரோட்டீன் (Whey Protein) பயன்படுத்துகிறேன்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Vijay Devarakonda ,VIJAY DEVARA KONDA ,THANKI KUNGAMAM ,TELUGU CINEMA ,Arjun Reddy ,Taxi Wala ,Geeta Govindam ,
× RELATED ஆரோக்கியத்துக்கு உதவும் கல்பாசி!