கூடலூர், மார்ச் 23: கூடலூர் பகுதியில் அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் மற்றும் பயணியர் பங்களா சுவற்றில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. தேர்தல் விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள், கட்சி கொடிகள், தலைவர்களின் படங்கள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்காக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான ரஞ்ஜீத் சிங் முன்பே தெளிவான உத்தரவு வழங்கியிருந்தார். இந்நிலையில் முக்கிய சாலைகளில் உள்ள சுவர் விளம்பரங்கள் நீக்கப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் அலுவலர்கள், சுவர் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
