மதுரை, மார்ச் 23: மாநில யூத் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் பெற உதவிய மதுரை பயிற்சியாளர், வீராங்கனை பாராட்டப்பட்டனர்.
ஒடிசாவில் மாநில அளவிலான யூத் வாலிபால் போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு, குஜராத், ஒடிசா உள்பட பல்வேறு மாநில அணிகள் விளையாடின. இதில் தமிழ்நாடு அணி ஒவ்வொரு லீக் சுற்றிலும் முன்னேறி கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கால் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்திய தமிழ்நாடு அணி அரை இறுதிப்போட்டியில் ஒடிசாவுடன் மோதியது. இதிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் கேரளாவுடன் விளையாடிது.
இதில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. இதனால் கேரளத்திற்கு தங்கப்பதக்கமும் தமிழ்நாடு அணிக்கு வெள்ளிப்பதக்கமும், ஹரியானாவிற்கு வெண்கலப்பதக்கமும் கிடைத்தது. தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு அணி வீரர்களுக்கான மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் தீபன்ராஜ், வீராங்கனை அபி ஆகியோரை தமிழ்நாடு வாலிபால் சங்க செயலாளர் மார்டின் சுதாகர், மதுரை மாவட்ட செயலாளர் ராகவன் ஆகியோர் பாராட்டினர்.
