×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்: சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதியும் பங்கேற்பு

* வெற்றி நிலவரம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம், புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முதல் நாளான கடந்த 17ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ந்து 18ம் தேதி தென்மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து 19ம் தேதி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்தது. 20ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 41 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 5வது நாளாக நேர்காணல் நடைபெற்றது.

நேற்று காலையில் கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்தது. மாலையில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னைதென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார்.

அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். நேர்காணலில் முதலில் போட்டியிட விரும்பம் தெரிவித்தவர்களின் விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் எந்த அளவுக்கு போய் சேர்ந்துள்ளது.

திமுகவின் பலம் மற்றும் பலவீனம் என்ன?. மற்ற கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?. திமுகவில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள்?. கட்சியில் வகித்துள்ள பொறுப்புகள் என்னென்ன?. கட்சிக்கான என்னென்ன பணிகள் ஆட்சி உள்ளீர்கள்?. உள்பட பல்வேறு கேள்விளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். தொடர்ந்து நீங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளில் வாய்ப்பு வழங்கினால், அங்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?. மேலும் கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அதனை ஏற்று கொள்ளவேண்டும்.

வெற்றி ஒன்றே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எனவே தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படவேண்டும் என்றும் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேர்காணல் செய்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, அந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து என்னென்ன திட்டங்களை செய்துள்ளீர்கள்,

தொகுதியில் மக்களின் முக்கிய பிரச்சனைகள் என்ன, என்னென்ன பிரச்னைகளை தீர்த்தீர்கள், தொகுதி மக்களிடம் உங்கள் செல்வாக்கு எப்படி உள்ளது, தேர்தல் பிரச்சாரத்தை எப்படி முன்னெடுக்கப் போகிறீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

* ‘நான் அப்பிடிப் பார்க்கிறேன்’
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள், ‘திமுக கூட்டணியை விட்டு வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். எப்படி பார்க்கிறீர்கள்’ என்று கேட்டபோது, ‘‘நான் அப்படி பார்க்கிறேன்’’ என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்து நடித்தார் துரைமுருகன். அவரது கிண்டலை பார்த்து அனைவரும் ரசித்து சிரித்தனர். ‘பல குற்றச்சாட்டுகளை வேல்முருகன் சொல்லியிருக்கிறாரே..’ என்று கேட்டதற்கு, ‘‘கூட்டணியை விட்டு வெளியேறும் போது நல்லபடியாக சொல்லி விட்டா வெளியேறுவார்கள்’’ என்றார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tiruvallur ,Kanchipuram ,Udhayanidhi ,Chepauk ,Chepauk-Thiruvallikeni ,
× RELATED ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது...