×

தெ.ஆ. உடன் 4வது டி20: சோபி டிவைன் சரவெடி நியூசி வென்று அதிரடி

 

வெலிங்டன்: தென் ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 3 போட்டிகள் முடிவில் நியூசி மகளிர் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தனர். இந்நிலையில், 4வது டி20 போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து, அந்த அணியின் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய க்ளோ டிரையான் 14, சூன் லூஸ் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த கேப்டன் லாரா உல்வார்ட் 10 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த வீராங்கனைகளில் அனெரி டெர்க்சன் சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 55 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இருப்பினும் பிற வீராங்கனைகள் சொதப்பியதால், தெ.ஆ. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. அதையடுத்து, 160 ரன் வெற்றி இலக்குடன் நியூசி மகளிர் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் இஸபெல்லா கேஸ் 6, ஜார்ஜியா பிளிமர் 29 ரன் எடுத்தனர். பின் வந்த கேப்டன் அமெலியா கெர் 31, சோபி டிவைன் சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 64 ரன் விளாசினார். பின் 5வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த புரூக் ஹேலிடேலி ஆட்டமிழக்காமல் 16, மேடி கிரீன் ஆட்டமிழக்காமல் 9 ரன் எடுத்தனர். அதனால், 18.3 ஓவரில் நியூசி மகளிர் 4 விக்கெட் மட்டுமே இழந்து 160 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தனர். இந்த வெற்றியை அடுத்து, 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் தொடரை கைப்பற்றி உள்ளனர். இந்த அணிகள் இடையிலான கடைசி போட்டி வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

 

Tags : 4th T20 ,South Africa ,Sophie Divine Saravedi ,New Zealand ,Wellington ,New Zealand Women's team ,South Africa Women's team ,South Africa Women's Cricket Team ,T20… ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரோர்...