×

வனத்துறை எச்சரிக்கையை மீறி ஆபத்தான காடுகள் வழியாக மலையேறும் பக்தர்கள்

*சமூக வலைதள லைக்ஸ் குவியுதா…?

கோவை : கோவை வெள்ளியங்கிரியில் அனுமதிக்கப்பட்ட மலைப்பாதையை தவிர்த்து விட்டு, ஆபத்தான காடுகள் வழியாக மலையேறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, மகா சிவராத்திரி முதல் சித்ரா பவுர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறுவது வழக்கம். இதன் காரணமாக, தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்து வருகின்றனர்.இதனிடையே, வெள்ளியங்கிரி மலையேற்றம் செய்யும் வீடியோ காட்சிகளை, சில பக்தர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இதில், பலருக்கு ‘லைக்ஸ்’ கிடைக்கிறது. அத்துடன், இதனைப் பார்த்து அதிகளவிலான நபர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மலையேற்றம் செய்ய வருகின்றனர். அவர்களில் சிலர், வழக்கமாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப்பாதைகளை தவிர்த்து விட்டு, காடுகளுக்குள் உள்ள ஒற்றையடி பாதைகள் வழியாக மலையேறி வருகின்றனர்.

இது ஆபத்து, காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கு ஆளாவோம் என்பதை அறியாமல் இந்த பயணத்தை தொடர்கின்றனர். சிலர், இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை பார்த்து பலரும், இந்த தவறான வழித்தடத்தையே தேர்வு செய்கின்றனர். இது அனுமதிக்கப்பட்ட வழித்தடம் இல்ைல என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும், இந்த மலையேற்றம் தொடர்கிறது.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:வெள்ளியங்கிரி மலை என்பது யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழும் பகுதியாக உள்ளது. அதேபோல், ஏராளமான நச்சுபாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் உள்ளன. வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.

சிலர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் எனக்கருதி, வழக்கமான மலைப்பாதைக்கு பதிலாக காடுகள் வழியாக மலையேற்றம் செய்கின்றனர். இவ்வாறு காடுகள் வழியாக பயணிப்பது ஆபத்தானது.

வனவிலங்குகள், விஷ ஜந்துகள் தாக்க வாய்ப்புள்ளது. இதேபோல், எந்த நேரத்திலும் மழை பெய்யவும், மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் நேரிடலாம். எனவே, காடுகள் வழியாக பக்தர்கள் மலையேறுவதை தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே மலையேற வேண்டும்.

காடுகள் வழியாக மலையேறுபவர்களை வனத்துறையினர் தடுக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். காடுகள் வழியாக மலையேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்லும் பக்தர்கள், அனுமதிக்கப்பட்ட வழிப்பாதையில் மட்டுமே மலையேற்றம் செய்கிறார்களா? அல்லது தடம் மாறிச்செல்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தடம் மாறிச்செல்வோர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, அது கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Coimbatore ,Velliangiri, Coimbatore ,Western Ghats ,Poondi ,
× RELATED பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில்...