*50 கி.மீ தூரத்தை 34 நிமிடங்களில் கடந்தது
பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி இடையே அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 50 கிமீ தூரத்தை 34 நிமிடங்களில் ரயில் கடந்தது.திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் மயமாக்கல் பணிகள் நிறைவுற்று நேற்று பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த அதிவேக சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் சுந்தரேசன், திருச்சி கோட்ட கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சத்யரத்தன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்த அதிவேக சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் அதிவேக ரயிலுக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் பூஜைகள் நடந்தது.
பின்னர் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் அதன் தலைவர் விவேகானந்தம், துணைத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் முகேஷ், பொருளாளர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மாலை 03.35 மணிக்கு புறப்பட்டு 105 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்று திருத்துறைப்பூண்டியை மாலை 04.09 மணிக்கு 34 நிமிடத்தில் சென்றடைந்தது. சோதனை ஓட்டம் பற்றிய ஆய்வறிக்கை விரைவில் ரயில்வே அதிகாரிகளால் வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
