×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

*தேர்தல் நடத்தை விதிகளால் வர்த்தகம் பாதிப்பு

திருமங்கலம் : ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலம் வாரச்சந்தையில் நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தேர்தல் நடத்தை விதிகளால் பாதி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

மதுரை, திண்டுக்கல், கம்பம், தேனி, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் கேரளம் மாநிலத்தில் இருந்து சந்தைக்கு வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர். இன்று ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கே சந்தை கூடியது. ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறையால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்ல ஆவணங்கள் வேண்டும் என்பதால் குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

ஆனால் நேற்று நடந்த சந்தைக்கு ஆடுகள் அதிகளவில் வந்தபோதும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரிகள் வரவில்லை.இதனால் அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ.3 கோடிக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையாகின’’ என்றார்.

செம்பட்டி சந்தையில் விற்பனை ரூ.1 கோடி

தி ண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு ஆத்தூர், சின்னாளப்பட்டி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி தேனி, கரூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும் குவிந்து விடுவர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சந்தையில் அதிகளவு வியாபாரிகள் குவிந்தனர்.இதனால் வியாபாரம் களைகட்டியது. ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Thirumangalam Warachanda ,Ramadan ,RAMJAN FESTIVAL ,Madurai District, ,Thirumangala ,
× RELATED பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில்...