×

ஏர்வாடி, மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: திரளான மக்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் உள்ள ஏர்வாடி முஸ்லிம் ஜமாத் சார்பில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் உள்ள முஸ்லிம் ஜமாத்தினர் முதல் நோன்பை கடந்த மாதம் பிப்ரவரி 18ம்தேதி துவக்கினர். தொடர்ந்து ரமலான் மாதம் முழுவதும் நோன்பு மேற்கொண்டனர். இதன்படி இன்று நோன்பு பெருநாளாக கொண்டாடினர். இதையொட்டி ரம்ஜான் சிறப்பு தொழுகை ஏர்வாடி 9வது தெருவில் உள்ள அல்ஹூதா பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு நடந்தது. முகம்மது உசைன் சிறப்பு தொழுகையை நடத்தினார். ஏர்வாடி முஸ்லீம் ஜமாத் இமாம் அமீர்ஜான் பிர்தௌசி மார்க்க சொற்பொழிவு வழங்கினார்.

இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் திரளாக தொழுகையில் பங்கேற்று கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஏழை மக்களுக்கு பித்ரா வழங்கி கொண்டாடினர். வடக்கு மெயின்ரோட்டில் உள்ள ஏர்வாடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகி ஷாபி கூறுகையில், முஸ்லிம் ஜமாத் சார்பில் முதல் நோன்பு கடந்த மாதம் பிப்ரவரி 18ம்தேதி அன்று துவங்கப்பட்டது. அதன்படி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

மேலும் ஏர்வாடி மட்டுமின்றி சுத்தமல்லி, சங்கரன்கோவில், மேலப்பாளையம், தென்காசி, கடையநல்லூர், திருச்சி, கோயம்புத்தூர், நெல்லை டவுண், தஞ்சாவூர், கோட்டூர், கம்பம், பாம்பன், கிருஷ்ணகிரி, காயல்பட்டினம் மற்றும் கேரளா, தெலுங்கானா, மும்பை, கர்நாடகா மற்றும் சவுதிஅரேபியா, ஆஸ்திரேலியா ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது என்றார். சிறப்பு தொழுகையை முகைதீன், கலீல்ரஹ்மான் முஸ்தபா சாகுல் அஜீஸ், அபுபக்கர் மற்றும் ஏர்வாடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலப்பாளையம் தக்வா ஜமாத், இந்திய ஹிஜ்ரி கமிட்டி சார்பில் பஜார் திடலில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. மவுலவி மீரான் தாவூதி இந்த தொழுகையை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் ரம்ஜான் குறித்து மக்களிடம் பேசினார். இந்த தொழுகைக்கு முன்பாக ஏழை மக்களுக்கு இஸ்லாமியர்கள் பித்ரா அரிசி வழங்கி தர்மம் செய்தனர். இதில் ஹிஜ்ரி கமிட்டி தரப்பில் இர்சத் சேட், மகபூப் ஜான், நாமியா ஹசன், அப்துல் கனி, பிறை அப்பாஸ், இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தக்வா ஜமாத் சார்பில் அன்வர், அப்பாஸ் இல்மி, உதுமான், நசீர், ரம்சான் அலி, வக்கீல் அலீப் மீரான், ரியாஸ் மற்றும் திரளான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

இதே போல் நெல்லை டவுன், கோட்டூர், சுத்தமல்லி மற்றும் ஏர்வாடி, கயத்தாறு ஆகிய ஊர்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை சிறப்பாக நடந்தது. தொழுகை முடிந்ததும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

Tags : Ramadan ,Ervadi, Melapalayam ,Nellai ,Muslims ,Nellai district ,Ervadi Muslim Jamaat ,Ervadi North Main Road, Nellai district… ,
× RELATED விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான...