சென்னை : 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க உத்தரவிடக் கோரி ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு தீர்ப்பாய தலைவரான டாக்டர் பி.முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் : 12 மணி நேரம் பணியாற்றுவதால், தூக்கமில்லாமல் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் நிகழ்கின்றன. அதோடு இந்த 12 மணி நேர பணி நடைமுறை தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமானது.
ஆம்புலன்ஸ் நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ. – ஜி.ஹெச்.எஸ்.(EMRI – GHS) : எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக 24 மணி நேரமும் சேவை வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. பணியில் சேரும் ஊழியர்கள் அதை ஏற்றுக்கொண்டு உள்ளனர். அதோடு 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுகிறது.
தொழிலாளர் தீர்ப்பாயம்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாக பின்பற்றப்படும் 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடுகிறோம்.
*இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்ட 30 நாட்களில் 8 மணி நேர பணி நடைமுறை அமலுக்கு வரும்
*அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேரத்துக்கான (ஓவர் டைம்) ஊதியத்தை வழங்க வேண்டும்
*108 ஆம்புலன்சின் பெண் பணியாளர்களுக்கு ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் தனி ஓய்வறைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அங்குள்ள கழிவறைகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
